

காணாமல் போன விமானத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் விமானியின் குடும்பத்தினரும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்தியக் கடலோர காவல் படைக்குச் சொந்தமான ‘சிஜி-791’ என்ற ‘டார்னியர்’ ரக விமானம் கடந்த 8-ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை கடல் பகுதியில் வழக்கமான கடல் ரோந்துப் பணிக்காகச் சென்றது. சிதம்பரம் அருகே 16 கடல் மைல் தொலைவில் விமானம் பறந்து சென்ற போது இரவு 9.23 மணிக்கு திருச்சியில் உள்ள ரேடார் கண்காணிப்பு கருவியில் இருந்து விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. காணாமல் போன விமானத்தில் விமானி வித்யாசாகர், துணை விமானி சோனி மற்றும் வழிகாட்டி சுபாஷ் சுரேஷ் ஆகிய மூவர் இருந்தனர்.
காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படையைச் சேர்ந்த 12 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. அத்துடன், ‘பி-8ஐ’ என்ற போர் விமானமும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘ஒலிம்பிக் கேன்யான்’ என்ற அதநவீன கப்பலும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இதுவரை காணாமல் போன விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையே, விமானத்தைத் தேடும் பணியில் விமானியின் குடும்பத்தினரும் ஈடுபட்டுள்ளனர். மாயமான விமானத்தில் சென்ற துணை விமானி சோனியின் மனைவி அம்ருதா, அவரது உறவினர்கள், பைலட் வித்யாசாகர் உறவினர்கள் உள்ளிட்ட மொத்தம் 8 பேர் நேற்று கடலூர் மாவட்டம், பிச்சாவரம் வந்தனர். பின்னர் அவர்கள் தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு சொந்தமான படகில் சென்று சதுப்பு நிலக்காட்டில் தேடிப் பார்த்தனர். இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் உடன் சென்றனர். ஆனால், இத்தேடுதல் வேட்டையில் எவ்வித தடயமும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவர்கள் சோகத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதற்கிடையே, விமானத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ‘ஐஎன்எஸ் சிந்துத்வஜ்’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் மீண்டும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கடற்படை தகவல் பகுப்பாய்வு மையம் அளித்த சில தகவல்களின் அடிப்படையில் தேடும் பணி நடைபெற்று வருவதாக சென்னையில் உள்ள கடலோர காவல்படையின் கிழக்கு மண்டல அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.