கடலில் விழுந்த விமானத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியாதது ஏன்?- கடற்படை அதிகாரி விளக்கம்

கடலில் விழுந்த விமானத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியாதது ஏன்?- கடற்படை அதிகாரி விளக்கம்
Updated on
2 min read

கடலில் விழுந்த கடலோர காவல் படை விமானத்தை இன்னும் கண்டு பிடிக்க முடியாதது ஏன் என்பது குறித்து கடற்படை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான டார்னியர் சிறிய ரக விமானம், கடந்த 8-ம் தேதி 3 வீரர்களுடன் காரைக்கால் அருகே கடல் பகுதியில் ரோந்துப் பணிக்கு சென்றபோது, திடீரென காணாமல் போனது. கடல் பகுதி யில் 10 நாட்களாக தேடியும் வீரர்கள் மற்றும் விமானத்தைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து கடலோர காவல் படையின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

காணாமல் போன விமானம் 9 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென 4 ஆயிரம் அடி கீழே வந்துள்ளது. முதலில் தெற்கு பகுதியை நோக்கியும், அதன் பின்னர் கிழக்கு நோக்கியும் பறந்துள்ளது. அதன்பிறகே ரேடாரில் இருந்து காணாமல் போயுள்ளது.

அந்த விமானத்தில் இருந்த அவசர காலத்துக்கு பயன்படும் இஎல்பி எனப்படும் தகவல் பரிமாற்றம் மற்றும் இருப்பிடத்தை காட்டும் கருவி துரதிர்ஷ்டவசமாக செயல்படாமல் போய்விட்டது. இதனால் விமானத்திலிருந்து உதவி கேட்டு எந்தத் தகவலும் எங் களுக்கு வரவில்லை. அந்தக் கருவி செயல்பட்டுக் கொண்டிருந் தால்கூட விமானம் இருக்கும் இடத்தை எளிதாக கண்டுபிடித்து விடலாம்.

தற்போது விமானத்தைத் தேடி வரும் கடல் பகுதியானது 1000 முதல் 1,500 மீட்டர் ஆழமானது. சூரிய வெளிச்சம் கொஞ்சம்கூட இல்லாமல், இருட்டாக இருக்கும். இதனால் ஆழ் கடல் தேடுதலில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் எரியும் விளக்குகளுடன் தேடுதல் வேட்டை நடத்தினால் மட்டுமே விமானத்தை கண்டு பிடிக்க முடியும்.

விமானத்தின் கருப்புப் பெட்டி யில் இருந்து 37.5 கிலோ ஹெட்ஸ் அலைவரிசையுடன் கூடிய சிக்னல் வந்தது. இது மிகவும் பலவீனமான சிக்னல். குறைந்தது 70 கிலோ ஹெட்ஸ் சிக்னல் கிடைத்தால் நன்றாக இருக்கும். இதனால்தான் விமானத்தில் இருந்து சுமார் 20 முறை சிக்னல் வந்த பின்னரும் அது இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது அந்த சிக்னலும் கிடைக்கவில்லை என்பதால், கடற்படை நீர்மூழ்கி கப்பல், தேடுதல் பணியை கைவிட்டு கரை திரும்பிவிட்டது.

கடலில் விபத்து ஏற்பட்ட இடத் தின் சுற்றுப்பகுதியில் விமானத்தின் பாகங்கள் அல்லது அதிலிருந்த வீரர்கள் பயன்படுத்திய பொருட் கள் ஏதாவது மிதந்தால் அதை வைத்து விமானம் கிடக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம். ஆனால், அப்படி எந்தவொரு தடயமும் இந்த விபத்தில் கிடைக்க வில்லை. விமானம் கிடக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டால் அதிலிருந்த வீரர்களின் நிலைமை என்ன என்பது தெரிந்துவிடும்.

டார்னியர் விமானம் ஜன்னல்கள் திறந்த நிலையில் இருக்கும் வகையைச் சேர்ந்தது. இதனால் 9 ஆயிரம் அடியில் இருந்து கீழே விழும்போது ஏற்படும் காற்றின் கடுமையான அழுத்தம் வீரர்களை நிலைகுலைய வைத்திருக்கும். இதனால் அவர்கள் விமானத்தில் இருந்து கீழே குதித்திருக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in