

பொதுவாக ஜூன் 1-ம் தேதி தொடங் கும் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு தள்ளிப் போகிறது.
இந்த ஆண்டு மே 30-ம் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. பருவ மழை முதலில் கேரள மாநிலத்தைத்தான் அடையும். கேரளாவில் ஜூன் 1-ம் தேதி மழை தொடங்கினால், பருவ மழை தொடங்கி விட்டது என்று அறிந்து கொள்ளலாம்.
ஆனால், இந்த ஆண்டு ஏற்கெனவே கணிக்கப்பட்ட நாளான மே 30-ம் தேதியும் இல்லாமல், ஜூன் 1-ம் தேதியும் இல்லாமல் தென் மேற்கு பருவமழையின் தொடக்கம் மேலும் தள்ளிப் போகிறது.
இதுபற்றி ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை தகவல் சேமிப்பு நிறுவனம் “மே 16-ம் தேதி தென் மேற்கு பருவ மழை அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் இருந்தது. மே 21-ம் தேதி அது வங்கக் கடலை நோக்கி நகர்ந்து இலங்கை அருகே இருந்தது. ஆனால் இந்த இடத்திலேயே ஒரு வாரத்துக்கு மேல் நகராமல் நிற்கிறது. இதனால் இன்னமும் தென்மேற்கு பருவமழை கேர ளாவை அடையவில்லை” என்று கூறியுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, “தென்மேற்கு பருவ மழை மே 30-ம் தேதி தொடங்கும் என கணித்திருந்தாலும் அதற்கு நான்கு நாட்கள் முன்போ, பின்போ தொடங் கலாம் என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்படி ஜூன் 3-ம் தேதி வரை அவகாசம் உள்ளது” என்றனர்.
1917-ல் அதிகபட்சம்:
1901-ம் ஆண்டு முதல் இந்தியாவில் தென்மேற்கு பருவமழையின் போது பெய்த அதிக பட்ச மழை அளவு 1124.2 மி.மீ ஆகும். இது 1917-ம் ஆண்டில் பதிவாகியுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு முதல் இந்தியாவில் தென்மேற்கு பருவ மழையின் போது சராசரியாக 700 மி.மீ முதல் 900 மி.மீ மழை வரை பதிவாகியுள்ளது.