

வங்கிகளில் கல்விக் கடன் பெற்று உயர்கல்வி பயின்ற மாணவர்கள் 19 ஆயிரம் பேருக்கு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கோரி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.
சிவகங்கைத் தொகுதியில் 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இந்த முறை அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை நிறுத்தி அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
மக்களிடம் வாக்குச் சேகரிப்பதற்காக கிராமம், கிராமமாகச் சென்று மத்திய அரசின் சாதனைகளை விளக்கியும், காங்கிரஸ் கட்சி மற்றும் தன் மீது புகார் கூறும் எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளித்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், தனது தொகுதியில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப் பட்டோர், மகளிருக்கு என தனித்தனியாக மாநாடுகளையும் நடத்தியுள்ளார்.
எல்லாவற்றுக்கும் மேலாக தன் முயற்சியால் கொண்டு வரப்பட்டுள்ள கல்விக்கடன் வழங்கும் திட்டத்தில் வங்கிகளில் கல்விக்கடன் பெற்று, கல்வி பயின்றுள்ள 19 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு அஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கோரியுள்ளார்.
ரூ.4-க்கான அஞ்சல் தலை ஒட்டப்பட்டு கையெழுத்திட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் சுருக்கம்:
“ஏழை, எளிய மாணவ, மாணவிகள் கட்டணம் செலுத்தி படிக்கமுடியாத நிலையால் ஏராளமானோருக்கு எட்டாக்கனியாக இருந்த உயர்கல்வி அனைவருக்கும் கிடைக்கச் செய்திட எனது ஆலோசனையில் கடந்த 2004-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற மத்திய அரசு கல்விக்கடன் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தது.
அதன்பிறகு 2009-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது படிக்கும் காலத்துக்கு வட்டி இல்லாமல் கடன் வழங்கப்பட்டது. இருப்பினும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியாமல் மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளானதால் ரூ.2600 கோடி ஒதுக்கி 2013 டிசம்பர் 31-ம் தேதி வரை வட்டியை தள்ளுபடி செய்தேன்.
இத்தகைய திட்டத்தால் ஏழ்மை குறுக்கீடு இல்லாமல் ஆயிரக்கணக்கானோருக்கு கல்வி கிடைத்துள்ளது.
ஆகை யால் நீங்களும், இன்னும் பல்லாயிரம் மாணவர்கள் பயன்பெறவும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் அவரது அலுவலகத்தில் இருந்து ரூ.4-க்கான அஞ்சல் தலை ஒட்டி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தன்படி சிவகங்கை தொகுதிக் குள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் இருக்கும் 19 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கடிதம் அனுப்பி இருக்கலாமெனத் தெரிகிறது.
கடிதச் செலவுக்காக ரூ.76 ஆயிரம் செலவழித்துள்ளார். இது தேர்தல் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படலாமெனக் கூறப்படுகிறது.