

தமிழகத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தன்மை அதிகம் என, கேரள வியாபாரிகள் பொய் பிரச்சாரம் செய்வதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து காய்கறி, முட்டை, உணவுப் பொருட்கள் அதிக அளவில் கேரளத்துக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. இந்நிலையில், இங்கு காய்கறிகளின் விளைச்சலுக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு அதிகம் என்பதால் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தன்மை கூடியுள்ளதாக கேரளத்தில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதனால், இங்கிருந்து கேரளத்துக்கு ஏற்றுமதியாகும் விளைபொருட்கள் கடந்த சில நாட்களாக பாதியாகக் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கேரளத்தில் பரப்பப்பட்டு வரும் தகவலைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் 200 வகையான காய்கறிகள், வேளாண் விளை பொருட்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில், நிர்ணயித்த அளவைக் காட்டிலும் குறைவான அளவிலேயே பூச்சிக்கொல்லி மருந்தின் தன்மை உள்ளதும், அதனால் பாதிப்பு இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
கேரளத்தில் பரப்பப்படும் பொய் பிரச்சாரம் குறித்து விவசாயிகள் கவலையடையத் தேவையில்லை. தமிழக அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் சந்திரசேகரன் கூறியதாவது:
தக்காளியைத் தவிர, கோவை மாவட்டத்தில் விளைந்த அனைத்து காய்கறி மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டன. இதில், தீங்கு விளைவிக்கும் அளவுக்கு பூச்சிக்கொல்லி மருந்து கிடையாது என முடிவுகள் வந்துள்ளன. அந்த முடிவுகளை பல்கலைக்கழகம், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளது.
அதனைக் கொண்டு தமிழக அரசு, கேரள அரசைத் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கும்.
இந்த விவகாரத்தில், கேரள வியாபாரிகளின் கைவரிசை உள்ளது. இங்குள்ள விளைபொருட்களின் விலையைக் குறைப்பதற்காக, இது போன்ற பொய்யான காரணங்களைத் தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது. விவசாயிகள் இது தொடர்பாக கவலை கொள்ளத் தேவையில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.