

காஞ்சிபுரத்தில் மகளிர் திட்டம் மூலம் அம்மா சிமெண்ட் விற்பனையை மாவட்ட ஆட்சியர் நேற்று தொடங்கி வைத்தார். இதற்காக புதிய விற்பனைக்கூடமும் திறந்து வைத்தார்.
காஞ்சிபுரத்தில், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அம்மா சிமெண்ட் விற்பனை செய்யும் வகையில், ரயில்வே சாலையில் அரசு மருத்துவமனை அருகே உள்ள பூமாலை வணிக வளாகத்தில் அம்மா சிமெண்ட் விற்பனை கூடம் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியர் சண்முகம் கலந்து கொண்டு விற்பனை கூடத்தை திறந்து வைத்தார். இதில், அம்மா சிமெண்ட் மூட்டை ஒன்று ரூ. 190க்கு விற்பனை செய்யப்படும். மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு 986565366, 044-27236348 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்பி மரகதம், எம்எல்ஏ சோமசுந்தரம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் முத்துமீனாள், மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் கிருஷ்ணாம்பாள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் ஏற்கெனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம், 6 இடங்களில் அம்மா சிமெண்ட் விற்பனை கூடம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.