Published : 12 Jun 2015 08:36 AM
Last Updated : 12 Jun 2015 08:36 AM

ஆர்.கே.நகரில் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் சி.மகேந்திரனை ஆதரிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வேண்டுகோள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள கட்சிகள் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரிக்க வேண் டும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆர்.கே.நகரில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரனுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

இவர்கள் தவிர சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, தமிழ் மாநில கட்சித் தலைவர் பால்கனகராஜ் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக, பாமக, மதிமுக, தமாகா, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன.

இந்நிலையில், புறக்கணித் துள்ள கட்சிகளின் ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ‘தி இந்து’ விடம் கூறும்போது, ‘‘இடைத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடக் காது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுப்பதில்லை, அரசு இயந்திரங் கள் தவறாகப் பயன்படுத்தப்படும் என பல்வேறு காரணங்களைக் கூறி ஆர்.கே.நகர் இடைத்தேர் தலை இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் புறக் கணித்துள்ளன. இந்த குற்றச்சாட்டு அனைத்தும் உண்மை. இடைத் தேர்தல் முறைகேடுகளை முறி யடித்து ஜனநாயகத்தை காப்பாற்றவே சி.மகேந்திரன் களத்தில் நிற்கிறார். எனவே, தேர்தலை புறக்கணித்துள்ள கட்சிகள் அனைத்தும் அவரை ஆதரிக்க வேண்டும்’’ என்றார்.

இந்த அழைப்பு பாஜகவுக்கு பொருந்துமா? என கேட்டபோது, ‘‘இடதுசாரிகள் எப்போதும் மதவாத சக்திகளை எதிர்ப் பவர்கள்’’ என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர், ஆர்.கே.நகரில் தங்கள் கட்சியினர் மனசாட்சிப்படி வாக்களிப்பார்கள் என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து திமுக மற்றும் பாஜக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘ஆர்.கே.நகரில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x