Published : 02 Jun 2015 07:50 AM
Last Updated : 02 Jun 2015 07:50 AM

முதல் நாளிலேயே வெறிச்சோடிய அரசுப் பள்ளி: மதுக்கடையை அகற்றாததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு

பள்ளி அருகேயுள்ள மதுக் கடையை மூடாததால், பெட்டட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை பெற்றோர் நேற்று அனுப்பவில்லை. மாற்றுச் சான்றிதழும் கோரியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடைகளை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலான பர்லியாறு பகுதியில் செயல்பட்டுவந்த மதுக்கடை மூடப்பட்டது. இந்தக் கடை குன்னூர் அருகேயுள்ள பெட்டட்டி கிராமத்துக்கு கடந்த 2013-ம் ஆண்டு மாற்றப்பட்டது.

பெட்டட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சியர் தலைமையில் நடந்த மனுநீதி நாள் முகாமில் மனு அளித்தனர். ஆனால், பெட்டட்டி சுங்கம் பகுதியில் ஊராட்சி ஒன்றியப் பள்ளி மற்றும் மருந்துக் கடை அருகிலேயே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

தொடர் போராட்டம்

இதை எதிர்த்து மாணவர் களுடன் சேர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். மதுக்கடையை அகற்றாவிட்டால், பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பப்போவதில்லை என முதல்வருக்கு மனுவும் அளித்திருந் தனர்.

பள்ளி வெறிச்சோடியது

தமிழகத்தில் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில், பெட்டட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 68 மாணவர்களின் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழுக்கும் விண்ணப்பித்துள்ளனர்.

மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கணேசமூர்த்தி, பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பெற்றோர் சமாதானமடையவில்லை. தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர். இதனால், மூன்று நாட்கள் அவகாசம் கோரியுள்ளார் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி.

இது குறித்து, கணேச மூர்த்தியிடம் கேட்டபோது, “பள்ளி யில் மாணவர்கள் தொடரவே விரும்புகின்றோம். பள்ளி வளாகத்தினுள் வெளியாட்கள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். வெளியாட்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸிடம் புகார் அளித்துள்ளோம். பள்ளிக்கு வெளியே நடப்பவைகளை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது” என்றார்.

இந்நிலையில், கலால் உதவி ஆணையர் ராஜ்குமார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் மதுக்கடையை ஆய்வு செய்தனர். “வேறு இடம் கண்டறியப்பட்டால், அங்கு கடையை மாற்ற முடியும். ஆனால், கடையை மூட முடியாது” என்று தெரிவித்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர், மதுக்கடையை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தங்கள் குழந்தைகளின் மாற்று சான்றிதழ் கேட்டு ஆட்சியரை இன்று சந்திக்க உள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x