

7 டன் செம்மரம் கடத்திய வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த டிஎஸ்பி தங்கவேலு நேற்று கைது செய்யப்பட்டார்.
ஆம்பூரை அடுத்துள்ள பாலூர் பகுதியைச் சேர்ந்த சின்னபையன், கடந்த மாதம் 26-ம் தேதி இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். செம்மரக் கடத்தலில் ஏற்பட்ட மோதல் சம்பவமே கொலைக்கு காரணம் எனத் தெரியவந்தது. மேலும், சின்னபையன் பதுக்கி வைத்திருந்த 7 டன் செம்மரத்தை, வேலூர் கலால் டிஎஸ்பி தங்கவேலு, போலீஸாருடன் சென்று மிரட்டி லாரியில் கடத்திச் சென்றாராம்.
இந்த கடத்தல் சம்பவத்துக்கு வேலூரைச் சேர்ந்த நாகேந்தி ரன், அவரது மனைவி ஜோதி லட்சுமி ஆகியோர் துணை யாக இருந்தது தெரிய வந்ததை யடுத்து, இருவரும் கைது செய்யப் பட்டதுடன் 3.5 டன் செம்மரம், 3 கார்கள், ரூ.32 லட்சம் ஆகிய வையும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, டிஎஸ்பி தங்கவேலு தலைமறைவானார்.
சின்னபையன் கொலை மற்றும் 7 டன் செம்மரக் கடத்தல் என இரண்டு வழக்குகளிலும் விசாரணையைத் தீவிரப்படுத்திய தனிப்படை போலீஸார், கொலை வழக்கு தொடர்பாக 4 பேரையும், செம்மரக் கடத்தல் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரையும் கைது செய்தனர்.
தலைமறைவான டிஎஸ்பி தங்கவேலுவைப் பிடிக்க தனிப் படை போலீஸார் சென்னை, மதுரை, திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் முகாமிட்டனர். அவருக்கு நெருக்கமான காவல் துறையினர், நண்பர்கள், உறவி னர்கள் கண்காணிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை அருகே பதுங்கி இருந்த டிஎஸ்பி தங்கவேலுவை தனிப்படை போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர். ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் செந்தில்குமாரி விசாரணை நடத்தியதாக தெரியவந்துள்ளது.