Published : 23 Jun 2015 07:21 AM
Last Updated : 23 Jun 2015 07:21 AM

மணல் கடத்தலை ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்க வலியுறுத்தல்

திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்க, குவாரிகளில் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையா ளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் எஸ். யுவராஜ் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் நேற்று அளித்த மனு விவரம்:

திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது ஒரு மணல் குவாரிகூட இயங்கவில்லை. 2013-2014 ஆண்டில் மணல் கடத்தியவர்களிடம் இருந்து ரூ. 5 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டது. இதுவே இங்கு மணல் கடத்தல் நடைபெறுவதற்கு சான்று.

இதுவரை கைது இல்லை

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறு, கரலைபாக்கம் ஏரி, பூச்சிஅத்திப்பேடு மற்றும் வெங்கல் பகுதிகளில் தொடர்ந்து மணல் கொள்ளையும், கடத்தலும் நடைபெற்று வருகிறது. ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

மணல் கடத்தலைத் தடுக்கும் வகையில், ‘‘மாவட்டத்திலிருந்து மணல் கடத்தப்படும் 3 வழிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு சோதனைச் சாவடி ஏற்படுத்த வேண்டும். மணல் கடத்தும் லாரி ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்வதுடன் அவர்களைக் கைது செய்ய வேண்டும். லாரிகளை பறிமுதல் செய்து அபராதம் விதிப்பதுடன், எந்தளவுக்கு மணல் அள்ளியுள்ளனர் என்பதைக் கணக்கிட்டு அதற்கான மொத்த தொகையையும் வசூலிக்க வேண்டும்.

ஆட்சியர் ஆய்வு அவசியம்

ஆற்றங்கரைகளில் மணலை பதுக்கி வைத்து கலப்படும் செய்யும் சமூகவிரோதச் செயலையும் தடுக்க ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கடத்தல்காரர்களுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். மணல் குவாரிகளில் மணல் கடத்தலைத் தடுக்க ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x