விஸ்வரூபம் எடுக்கிறது மணல் குவாரி பிரச்சினை: காவேரிப்பாக்கம் அருகே போலீஸ் - பொதுமக்கள் மோதல்- காவல்துறை வாகனம் சேதம்; 16 பேர் கைது

விஸ்வரூபம் எடுக்கிறது மணல் குவாரி பிரச்சினை: காவேரிப்பாக்கம் அருகே போலீஸ் - பொதுமக்கள் மோதல்- காவல்துறை வாகனம் சேதம்; 16 பேர் கைது
Updated on
1 min read

காவேரிப்பாக்கம் அடுத்துள்ள களத்தூர் கிராமத்தில் உள்ள பாலாற்றில் மணல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில், இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் மணல் குவாரி அமைக்க ஆதரவு தெரிவிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குவாரிக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் மற்றும் சில மகளிர் குழுவுக்கு மணல் குவாரி அமைக்க உள்ளவர்கள் சார்பில் பணம் வழங்கப்பட்டுள்ளது. இதை தெரிந்துகொண்ட எதிர் தரப்பினர் வீடு வீடாகச் சென்று அந்தப் பணம் ரூ.2 லட்சத்து 12 ஆயிரத்தை வாங்கி முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பினர்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு இருதரப்பினர் இடையே அடிக்கடி மோதல் சம்பவம் அதிகரித் துள்ளது. இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, வேலை உறுதித் திட்டத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக 19 பேரை போலீஸார் கைது செய்து சிறை யில் அடைத்தனர். கைது செய்யப் பட்டவர்களில் பெரும்பாலா னவர்கள் இளைஞர்கள் என்றும் மணல் குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த ஒரே காரணத் துக்காக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாக ஊர்மக்கள் புகார் தெரிவிக் கின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்கக்கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு வேலூர் ஆட்சி யர் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

நள்ளிரவு நேரம் என்பதால் இரண்டு போலீஸ் வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு களத்தூர் கிராமத்துக்கு போலீஸார் சென்றனர். அங்கு, போலீஸாருக்கும் கிராம மக்களுக் கும் இடையே திடீரென ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. பாதுகாப்புப் பணிக் காகச் சென்ற போலீஸார் சிலரை பொதுமக்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆய்வாள ரின் வாகனமும் சேதப்படுத்தப் பட்டதாம். இந்த தகவலை அடுத்து வேலூரில் இருந்து கூடுதல் போலீஸார் களத்தூர் கிராமத் துக்கு சென்று, பொதுமக்களை தடியடி நடத்தி விரட்டியதாகக் கூறப்படுகிறது. பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்ததாக காவலர் வெங்கடேசன் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார்.

இதுகுறித்து, வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் பெண்கள் உள்ளிட்ட 19 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் 16 பேரை கைது செய்துள்ளனர்.

போலீஸாருக்கு பயந்து ஏராள மான ஆண்கள் கிராமத்தை விட்டு வெளியேறி தலைமறைவாக உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in