Published : 19 Jun 2015 07:32 AM
Last Updated : 19 Jun 2015 07:32 AM

முதல்முறையாக ஆர்.கே.நகரில் அறிமுகம்: பூத் சிலிப்பில் வாக்குச்சாவடி வரைபடம் - தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

நாட்டிலேயே முதல்முறையாக ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் ‘பூத் சிலிப்பில் வாக்குச்சாவடிக்கு வருவதற்கான சாலை வரைபடம் அச்சடிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகு திக்கு வரும் 27-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதை யொட்டி, தேர்தல் அலுவலர் களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ‘இ-நேத்ரா’ என்ற புதிய முறை நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில் வந்துள்ள புகார்கள் மற்றும் புதிய நடைமுறைகள் குறித்து நிருபர்களிடம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:

‘இ-நேத்ரா’ தொடங்கப்பட்டது முதல் தற்போது (நேற்று பிற்பகல் 2 மணி) வரை இ-மெயில் வாயி லாக ஒன்று, எஸ்எம்எஸ்-ல் 15, மொபைலில் 3, நேரடியாக தொடர்பு மையத்தில் ஒன்று என மொத்தம் 20 புகார்கள் வந்துள்ளன. இவற்றில் 16 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு புகார்தாரர்களுக்கு பதில் அளிக்கப்பட்டுவிட்டது. 3 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆர்.கே.நகர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 100 ஐ.பி. கேமராக்களின் பதிவுகளை 4 நிமிடத்துக்கு ஒருமுறை 22 இடங்கள் என்ற அடிப்படையில் இங்கிருந்தபடியே கண்காணித்து வருகிறேன். தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக, 500 எல்லைப் பாதுகாப்பு மற்றும் ரிசர்வ் படை வீரர்கள் வந்துள்ளனர். மேலும், 500 பேர் விரைவில் வருவர்.

வாக்கு எண்ணும் பணி, ராணிமேரிக் கல்லூரியில் நடக்கிறது. அங்கும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடு படுவர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி பட்டியல் அளித்துவிட்டார். அடுத்த கட்ட ஆய்வு முடிந்ததும் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த தகவல் வெளியிடப்படும்.

தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பு அதாவது 22-ம் தேதி வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ வழங்கப்படும். நாட்டிலேயே முதல்முறையாக இந்த இடைத் தேர்தலில் பூத் சிலிப்பின் பின்புறம் வாக்குச்சாவடிக்கு செல்வதற்கான ‘கீ மேப்’(வரைபடம்) இடம் பெறுகிறது.

இவ்வாறு சந்தீப் சக்சேனா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x