Published : 16 Jun 2015 05:20 PM
Last Updated : 16 Jun 2015 05:20 PM

காவிரி பிரச்சினை: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முத்தரசன் வலியுறுத்தல்

காவிரியில் தமிழ்நாட்டுக்குரிய உரிமையை நிலைநாட்டிட உரிய நடவடிக்கை மேற்கொண்டு, மத்திய அரசு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காவிரியின் குறுக்கே 4 அணைகள் கட்டி அதன் மூலம் 10 டி.எம்.சி தண்ணீரை தேக்க கர்நாடக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி பாட்டீல் தலைமையில் அதிகாரிகள், வல்லுநர்கள் கூடி ஆலோசனைக்கூட்டம் நடத்தியுள்ளனர்.

இரண்டு பெரிய அணைகள் கட்டினால் மத்திய அரசின் அனுமதி கிடைக்காது என்பதால், சிறிய அணைகள் என்ற பெயரில் 4 அணைகளை கட்டி தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காவிரியில் வரும் தண்ணீர் முழுவதையும் தேக்கி, தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்கச் செய்யாமல் செய்துவிட வேண்டுமென்று, கர்நாடக அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகின்றது.

குடிதண்ணீருக்கு பயன்படுத்தப்போகின்றோம் என்ற போர்வையில் தமிழகத்தை குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கவும், சென்னை உட்பட இருபதுக்கும் மேற்பட்ட மாவட்ட மக்களின் குடிநீர் பயன்பாட்டை தடுத்து, நிறுத்தவும் கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் அனைத்தும் கடும் கண்டனத்திற்குரியது.

கர்நாடக அரசின் அத்துமீறிய செயல் குறித்தும், இப்பிரச்சினையில் காலம் தாழ்த்தாது உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டுமெனக்கோரியும், மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும், அரசியல் வேறுபாடு இன்றி ஒன்றிணைந்து பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவர் விஜயகாந்த் தனது தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து சென்று பிரதமரை சந்தித்து முறையிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார்.

இடதுசாரி கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து போராடிக் கொண்டு உள்ளனர். தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அத்தீர்மானத்தை அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரை நேரில் சந்தித்து கொடுத்துள்ளனர்.

பல மாதங்களாக தொடரும் இப்பிரச்சினையில் மத்திய அரசு தலையிடாமல், மவுனம் காப்பது பல்வேறு ஐயப்பாடுகளுக்கு இடமளிக்கின்றது. மத்திய அரசு பாரபட்சமின்றி நடுநிலையோடு நடப்பதும், காவிரியில் தமிழ்நாட்டுக்குரிய உரிமையை நிலைநாட்டிட உரிய நடவடிக்கை மேற்கொண்டு, உண்மையாக நடந்து கொள்ள வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ்நாடு அரசு அரசியல் பேதங்களுக்கு இடமளிக்காமல் அனைத்துக்கட்சி கூட்டத்தை உடன் நடத்தி ஒருமித்த கருத்துடன், செயல்பட உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x