

வாகனங்களின் பெருக்கத்தால் காற்றில் வெப்பத் தின் அளவு அதிகரித்து மழை இல்லாமல் செய்துவிட்டது. இதை தவிர்க்க நகர மக்கள் கட்டாயம் வீட்டுகொரு மரம் வளர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்திரமேரூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி காவ்யா 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப் பள்ளி அளவில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். இவர் உட்பட பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பள்ளி சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ரமணன் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். முன்னதாக, பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக சராசரியாக 32 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், தற்போது வெப்ப சலனம் காரணமாக கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களின் எல்லையோர பகுதிகளில் உள்ள தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் தமிழக ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு ஏற் பட்டுள்ளது.
பூமியின் மேலடுக்கில் நில காற்றில் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளதால், கடல் காற்று நிலப்பகுதியில் ஊடுருவது குறைந்துள்ளது. இதனால், நிலப்பகுதியில் உள்ள காற்றில் குளிர்ச்சி தன்மை குறைந்து, வெப்பம் அதிகரித்து மழை பெய்வது கடினமாகியுள்ளது.
நாட்டின் வளர்ச்சி காரணமாக கிராமப் பகுதிகள் குறைந்து நகரப்பகுதிகள் அதிகரித்து வருகின்றன. இதனால், மக்கள் மற்றும் வாகன பெருக்கம், தொழிற்சாலைகள் பெருக்கம் ஏற்பட்டு நிலக்காற்றில் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க நகரத்தில் கட்டாயமாக வீட்டுக்கொரு மரம் வளர்க்க வேண்டும். மரங்கள் அதிகரித்தால் மழையும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு இடைநிலை கல்வி அலுவலர் சீதாலட்சுமி தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பிரபாகரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.