

விவசாயிகள் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். தஞ்சையில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:
குறுவை சாகுபடிக்கு ஆண்டு தோறும் ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். இந்நிலையில், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளதால் டெல்டா விவசாயிகள் பெரிதும் கவலைக்குள்ளாகியுள்ளனர். விவசாயிகள் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனப் போக்கையே கடைப்பிடிக்கின்றன.
காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக கர்நாடக அரசிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். டெல்டா மாவட்ட விவசாயி களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், காவிரி மேலாண்மை வாரியம், நீர் பங்கீட்டுக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கும் என்றார்.