

மின் ஆளுமை திட்டத்தின்கீழ் சிறப்பான சேவை புரிந்ததற்காக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு 3 ஐ.எஸ்.ஒ. தரச்சான்றுகள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் மின் ஆளுமை (இ-கவர்னன்ஸ்) திட்டத்தின்கீழ், சிறப்பாக பொதுமக்களுக்கு சேவை வழங்கியதற்காக 3 ஐ.எஸ்.ஒ. தரச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை தரச் சான்றிதழ் அளிக்கும் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்கள் சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் சாலிகிராமம், அமைந்தகரை மற்றும் தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் ஆய்வு செய்தனர்.
இதில், மின் ஆளுமை திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் சிறப்பான சேவை புரிந்ததற்காக ஐ.எஸ்.ஒ. 9001:2008, 20000-1:2011, 27001:2013 ஆகிய மூன்று தரச்சான்றுகள் வழங்கப்பட்டன. இதன் மூலம், மேலும் பொதுமக்களுக்கு மின் ஆளுமை திட்டத்தின்கீழ் சிறப்பான சேவை அளிக்க ஊக்கம் அளித்துள்ளது.
இவ்வாறு பாலமுருகன் தெரிவித்துள்ளார்.