

ஆர்.கே. நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி. மகேந்திரன் உள்ளிட்ட 32 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. சசிபெருமாள் உள்ளிட்ட 18 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஆர்.கே. நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 3-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி முடிந்தது. அதிமுக சார்பில் முதல்வர் ஜெய லலிதா, கடந்த 5-ம் தேதி மனு தாக்கல் செய்தார். மொத்தம் 50 பேர் மனு தாக்கல் செய்தனர்.
மனுக்கள் மீதான பரிசீலனை, தேர்தல் அதிகாரி சவுரிராஜன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தேர்தல் பொது பார்வையாளர் ராஜூ நாராயண சாமியும் இருந்தார்.
முதல்வர் ஜெயலலிதா (அதிமுக), சி.மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), டி.அப்துல் ரகீம் (இந்திய தேசிய லீக்), ஆர்.ஆபிரஹாம் ராஜா மோகன் (இந்திய மக்கள் கட்சி - மதசார்பற்றது), ஆர்.சி.பால் கனகராஜ் (தமிழ் மாநில கட்சி), டி.பால்ராஜ் (மக்கள் மாநாட்டு கட்சி), யு.கே மணிமாறன் (தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம்) மற்றும் டிராஃபிக் ராமசாமி உட்பட 25 சுயேச்சைகள் என மொத்தம் 32 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
இந்த இடைத்தேர்தலில் திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக, பாமக, தமாகா, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட வில்லை.