

தூத்துக்குடி அருகே அலங்கார மீன்வளர்ப்பில் சாதனை படைத்து வருகிறார் பட்டதாரி இளைஞர். அரசு மானியத்துடன் அவர் அமைத்துள்ள அலங்கார மீன் பண்ணையில் மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளத்துறை சார்பில் மேற்கொள் ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் நேற்று ஆய்வு செய்தார். சேர்வைக்காரன்மடம் அருகேயுள்ள சக்கம்மாள்புரம் கிராமத்தில் கு.சரவணன் என்ற இளைஞர் நடத்தி வரும் அலங்கார மீன்பண்ணையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
ரூ. 2 லட்சம் லாபம்
ஆட்சியர் கூறும்போது, `இந்த அலங்கார மீன்பண்ணை 0.75 ஏக்கரில் அமைந்துள்ளது. 2012- 2013-ம் ஆண்டில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான இந்த அலங்கார மீன்பண்ணை அமைக்க 25 சதவீதம் மானியம் வழங்கப்பட்டது.
அலங்கார மீன் வளர்ப்பு தொழில் லாபகரமான தொழிலாக உள்ளது. இதன் மூலம் சரவணன் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரை லாபம் பெற்று வருகிறார்’ என்றார் ஆட்சியர்.
1 லட்சம் குஞ்சுகள்
சரவணன் கூறும்போது, `150 தொட்டிகளில் அலங்கார மீன் குஞ்சுகளை வளர்த்து வருகிறோம். தற்போது 1 லட்சம் மீன் குஞ்சுகள் இங்கே உள்ளன. 79 வகையான சிக்லிட் இன அலங்கார மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இங்கேயே அலங்கார மீன்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டு குஞ்சுகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தமிழகம் மட்டுமின்றி கொல் கத்தா, மும்பை, கொச்சி, பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. விமானம், ரயில், பஸ்கள் மூலம் மீன்கள் அனுப்பப்படுகின்றன. மாதம் தோறும் இங்கிருந்து சராசரியாக 10 ஆயிரம் அலங்கார மீன்கள் விற் பனைக்காக அனுப்பப்படுகின்றன.
எல்லோ மார்ப் ரகம்
மீன்களை பொறுத்தவரை கிராக்கியை பொறுத்து ஒரு மீன் ரூ. 20-ல் இருந்து ரூ. 100 வரை விலை போகிறது. `எல்லோ மார்ப்’ என்ற வகைக்கு தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. இந்த மீன்களை வளர்க்க ரூ. 15 முதல் ரூ. 50 வரை செலவாகிறது.
அலங்கார மீன்வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்து தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் பயிற்சி பெற்றேன். மீன்களுக்கு அவ்வப்போது ஏற்படும் நோய்களுக்கு நாங்களே மருந்து கொடுக்கிறோம்’ என்றார் அவர்.
மீன் விதைப்பண்ணை
இதேபோல் திருவைகுண்டம் வட்டம் மாரமங்கலம் கிராமத்தில் பொன்ராஜ் என்பவ ருக்கு சொந்தமான மீன் விதைப் பண்ணையிலும் மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் ஆய்வு செய்தார். மீன் விதைப்பண்ணை அமைக்க இவருக்கு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
தரமான கட்லா, ரோகு, மிர்கால் நுண் மீன்குஞ்சுகள் தனியார் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டு, இங்குள்ள மீன்விதைப் பண்ணை குளங்களில் மீன் விரலிகளாக வளர்க்கப்படுகிறது. பின்னர் அவை தனியார் மீன் பண்ணைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் ஒரு அறுவடைக்கு ரூ. 1 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.