மவுலிவாக்கம் கட்டிடத்தில் வீடு வாங்கியவர்கள் வேதனை: கிடைக்காத வீட்டுக்கு கடன் கட்டுகிறோம் - நிவாரணம் கிடைக்க அரசு உதவ கோரிக்கை

மவுலிவாக்கம் கட்டிடத்தில் வீடு வாங்கியவர்கள் வேதனை: கிடைக்காத வீட்டுக்கு கடன் கட்டுகிறோம் - நிவாரணம் கிடைக்க அரசு உதவ கோரிக்கை
Updated on
1 min read

மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் வீடு வாங்கியவர்கள், தங்களுக்கு நிவாரணம் கிடைக்க அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து நேற்றுடன் ஓராண்டு ஆகிறது. இந்நிலையில் அந்த குடியிருப்பில் வீடு வாங்க பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சங்கத்தின் உறுப்பினர் பிரசாந்த் உள்ளிட்டோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

நாங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த சேமிப்பு, வங்கி கடன் ஆகியவற்றை வைத்து மவுலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கினோம். அந்தக் கட்டிடம் கடந்தாண்டு இடிந்து விழுந்ததால் எங்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது. இழந்த பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக 55 முதலீட்டாளர்கள் ஒன்றுசேர்ந்து சங்கம் ஒன்றை உருவாக்கினோம்.

அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி கமிஷனிடம் தனித்தனியாகவும், குழுவாகவும் மனு கொடுத்தோம். ஆனால் எந்தப் பலனும் இல்லை. பில்டரிடம் முறையிட்டும் பயனில்லை. இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள தேசிய நுகர்வோர் பாதுகாப்பு மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். அரசு எங்களுக்கு முறையான இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம். சம்பவம் நடந்து ஓராண்டாகியும் நிவாரணம் கிடைப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.

நாங்கள் அனைவரும் பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டப்படுகிறோம். கிடைக்காத வீட்டுக்காக வங்கியில் மாத தவணையாக ரூ.30 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலுத்தி வருகிறோம். கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் பார்த்த பிறகுதான் வங்கிகள் கடன் கொடுத்தன. ஆனால் இப்போது அவர்கள் தங்களுக்கும் விபத்துக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்கள். பில்டரிடம் போய் பணம் கேளுங்கள் என்கிறார்கள். அல்லது அரசு உத்தரவிட்டால் கடன் தொகையை தள்ளுபடி செய்வதாக வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர்.

சம்பவத்துக்கு காரணமானவர் களாகக் கூறப்படும் பில்டர், அரசு அதிகாரிகள், பொறியாளர்கள் என அனைவரும் நிம்மதியாக இருக்கிறார்கள். நாங்கள் மட்டும் வீட்டை இழந்து, பணத்தை இழந்து அவதிப்படுகிறோம். கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அரசு உதவ வேண்டும். இந்த விஷயத்தில் முதல்வர் நேரடியாகத் தலையிட்டு, எங்களுக்கு உதவ வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in