

அரக்கோணம் ரயில் நிலையத்தில் நடைமேடைகளின் நீளம் குறைவாக உள்ளதால் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே, இவற்றின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் என வாசகர் ஒருவர் உங்கள் குரலில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, புட்லூரைச் சேர்ந்த ராகவேந்திர பட் என்பவர் ‘தி இந்து’ உங்கள் குரல் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட்டுச் செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. இந்த ரயில் நிலையத்தில் உள்ள முதல் மற்றும் இரண்டாம் எண் நடைமேடையில்தான் பெரும்பாலான விரைவு ரயில்கள் நின்று செல்கின்றன. இந்த ரயில் நிலையம் அமைக்கும் போது 18 பெட்டிகள் கொண்ட ரயில்கள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடைகள் கட்டப்பட்டன.
தற்போது, 22 முதல் 24 பெட்டிகளைக் கொண்ட விரைவு ரயில்கள் இயக்கப்படுவதால் அந்த ரயிலின் நீளத்துக்கு ஏற்ப ரயில் நடைமேடைகளின் நீளம் இல்லை. இதனால், 4 முதல் 6 பெட்டிகள் நடைமேடையை விட்டு வெளியே நிற்பதால் பயணிகள் ஏறவும், இறங்கவும் மிகவும் சிரமப்படுகின்றனர். பெண்கள், முதியவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் அரக்கோணத்துக்கு வரும் கோவை, பிருந்தாவன் விரைவு ரயில்களின் கடைசி பெட்டிகள் நடைமேடையை விட்டு வெளியே நிற்பதால் பயணிகள் ரயில் நிலையம் வந்தடைந்ததை அறிவதில்லை. ரயில் புறப்பட்டுச் சென்ற பிறகுதான் அவர்களுக்கு தெரிகிறது. இதனால் இறங்க முடியாமல் தவிக்கின்றனர். இப்பிரச்சினையைத் தவிர்க்க நடைமேடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும். அனைத்து ரயில்களுக்கும் போதிய நடைமேடை வசதியுள்ள திருவள்ளூரில் நின்று செல்ல வேண்டும்.
இவ்வாறு ராகவேந்திர பட் கூறினார்.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘அரக்கோணம் ரயில் நிலையத்தில் முதல் மற்றும் 2-வது நடைமேடையின் வெளியே சிக்னல் அமைந்துள்ளதால் அவற்றை அப்புறப்படுத்தி நடைமேடையை விரிவாக்கம் செய்ய வேண்டி உள்ளது. இது மிகவும் சிக்கலான பணி. எனினும், பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.