

மாநில தலைமை தகவல் ஆணையர், ஊழல் ஒழிப்பு ஆணையர், லஞ்ச, ஊழல் தடுப்பு துறை இயக்குநர் ஆகிய பதவிகளுக்கு உடனடியாக நியமனங்கள் செய்ய வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று தனது முகநூல் பக்கத்தில் ஸ்டாலின் எழுதியுள்ள பதிவில், ''அரசின் வெளிப்படையான நிர்வாகத்துக்கும், ஊழலை கண்காணித்து தடுக்கவும் உருவாக்கப்பட்ட முக்கிய அரசு துறைகளின் தலைவர் பதவிகள் காலியாக உள்ளன. இதனால் இத்துறைகள் செயலிழந்து நிற்கின்றன.
அடுத்தடுத்து ஊழல் புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஊழல் ஒழிப்புக்கான முக்கிய துறைகளுக்கு தலைவர்களை நியமிக்க அதிமுக அரசு முன்வரவில்லை. மாநில தலைமை தகவல் ஆணையர், ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைவர், லஞ்ச, ஊழல் தடுப்புத் துறை இயக்குநர் ஆகிய பதவிகள் காலியாகவே உள்ளன.
பல லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் தவிக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் நியமிக்கப்படவில்லை. இதுபோன்ற முக்கியமான பதவிகளுக்கு அதிகாரிகளை நியமனம் செய்யாவிட்டால் அது ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான நிர்வாகத்துக்கு தடையாக அமைந்து விடும்.
வெளிப்படையான நிர்வாகமும், ஊழல் ஒழிப்பும்தான் ஒரு சிறந்த ஆட்சிக்கு எடுத்துக்காட்டாகும். எனவே, காலியாக உள்ள முக்கிய துறைகளுக்கு உடனடியாக அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும்'' என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.