விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டை தமிழக அரசு உயர்த்த வேண்டும்: ஸ்டாலின்
அதிமுக அரசு விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டை உயர்த்த வேண்டும். அதை உரிய நேரத்தில் வழங்கிட வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று ஸ்டாலின் எழுதியுள்ள முகநூல் பதிவில், '' பயிர் காப்பீடு கோரி அரிமங்கலம் அருகேயுள்ள கீழநிலைக்கோட்டையைச் சேர்ந்த விவசாயிகள், அதிமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த விவசாயிகள் ஒழுங்கு முறையற்ற வானிலை காரணமாக கடும் இழப்பை சந்தித்துள்ளனர்.
விவசாயத்துறையின் திறமையின்மையால் விவசாய சமுதாயம் அவதியுறுவது இது முதல் முறையல்ல. மற்ற பகுதிகளிலும் தாமத்துக்காக இதே போன்ற ஆர்ப்பாட்டங்களையே அவர்கள் நடத்தியுள்ளனர். காப்பீட்டை நம்பித்தான் பல சிறு மற்றும் குறு விவசாயிகள் இருக்கின்றனர். அதிலும், எதிர்பாராத காலநிலை அதிர்ச்சிகளை எதிர்கொள்வதற்கு அவர்கள் காப்பீட்டையே நம்பியுள்ளனர்.
விவசாயிகளின் நிதி பாதுகாப்பை மேம்படுத்த வலுவான வேளாண் கட்டமைப்புகளை திறம்பட செயல்படுத்தப்பட வேண்டிய பொறுப்பு அரசினுடையது. சிறு மற்றும் குறு விவசாயிகள் மீது அதிமுக அரசு அக்கறையின்றி செயல்படுவது கவலையளிப்பதாக உள்ளது.
அதிமுக அரசு விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டை உயர்த்த வேண்டுமென்றும், அதை உரிய நேரத்தில் வழங்கிட வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
