

தஞ்சையில் உள்ள தனியார் பள்ளிகள் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை மீறுவதாகவும், கல்விக் கட்டணம் செலுத்தாத ஏழைக் குழந்தைகளை பள்ளியிலிருந்து வெளியேற்றுவதாகவும் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
தஞ்சை கீழவாசல் கவாடிக்காரத் தெருவைச் சேர்ந்தவர் ம.வேல்முருகன். மோட்டார் மெக்கானிக். இவர், ஆட்சியர் என்.சுப்பையனிடம் நேற்று அளித்த புகார் மனு விவரம்:
குறவர் சமூகத்தைச் சேர்ந்த நான், எனது மகன் யுவகார்த்திக்கை தனியார் மெட்ரிக். பள்ளியில், கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் கடந்த கல்வியாண்டில் எல்கேஜி வகுப்பில் சேர்த்தேன்.
இந்நிலையில், நேற்று எனது மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது, இலவச இடஒதுக்கீடு ஓராண்டுக்கு மட்டும்தான், கட்டணம் செலுத்தினால் மட்டுமே தொடர்ந்து படிக்கலாம் எனக் கூறி, யுகேஜி வகுப்பில் சேர்க்க மறுத்து விட்டனர். இதையடுத்து, குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன். கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி எனது மகன் தொடர்ந்து அப்பள்ளியில் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
இதேபோல, கூலித் தொழிலாளி இ.தமிழ்செல்வன் கூறும்போது, "ஏழை மாணவர்களுக்கான இலவச இட ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு எனது மகள் வர்ஷினியை தனியார் பள்ளியில் எல்கேஜி வகுப்பில் சேர்த்தேன். ஆனால், நேற்று பள்ளிக்குச் சென்றபோது, கட்டணம் செலுத்தினால்தான் யுகேஜி வகுப்பில் சேர்ப்போம் என்றனர். பின்னர், ரூ.5 ஆயிரமாவது செலுத்துங்கள். அரசிடமிருந்து எங்களுக்கு வரவேண்டிய பணம் வந்தவுடன், அதைத் திரும்பத் தருகிறோம் என்றனர். நான், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் எனது மகளை யுகேஜி வகுப்பில் அமர வைத்தனர். எனினும், பணம் கட்டினால்தான் இங்கு தொடர்ந்து படிக்க முடியும் என்கின்றனர். பல குழந்தைகளை பள்ளியில் படிக்க முடியாமல் வெளியேற்றிவிட்டனர். சிலர், கடன் வாங்கி பணத்தைக் கட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” என்றார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் அறிவுடைநம்பி, ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். அதில், "கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை மீறும் தனியார் பள்ளிகள், இடஒதுக்கீட்டில் பயிலும் குழந்தைகளிடம் நடப்பாண்டு கட்டணம் வசூலிக்கின்றனர். கடந்த ஆண்டும் பல தனியார் பள்ளிகள் இதேபோல செயல்பட்டன. எனவே, சட்டத்தை செயல்படுத்தாத சுயநிதிப் பள்ளிகளைக் கண்டறிய மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுவை அமைக்கவும், இந்த சட்டத்தின்படி பள்ளியில் சேர்ந்த ஏழைக் குழந்தைகளின் பட்டியலை வெளியிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.