Published : 08 Jun 2015 07:39 PM
Last Updated : 08 Jun 2015 07:39 PM

கன்னியாகுமரியில் குறைந்துவரும் நெல் சாகுபடி பரப்பளவு: விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படுமா?

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பளவு வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் சொந்த தேவைக்கே பிற மாவட்டங்களிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தபோது, நெற் களஞ்சியமாக திகழ்ந்தது. நெல் சாகுபடியில் கொடிகட்டிப் பறந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் படிப்படியாக நெல் சாகுபடி சரிந்து வருவதற்கு, பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

குறிப்பாக விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றும்போது உரிய நடைமுறைகளை பின்பற்றாததே முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் சில குறிப்பிட்ட நிலங்களை அதிக விலை கொடுத்து வாங்கி விடுகின்றனர். தொடர்ந்து அதனை ஒட்டியுள்ள நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் பாதையை அடைத்து விடுகின்றனர். இதனால் வேறு வழியில்லாமல் அருகில் உள்ள விவசாயிகளும் ரியல் எஸ்டேட்காரர்களிடமே குறைந்த விலைக்கு நிலத்தை விற்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகின்றனர்.

மேலும், ரசாயன உரங்கள், பூச்சிகொல்லி மருந்து களின் விலையேற்றம், விளைப் பொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் பலர் விவசாயத்தில் ஈடுபடுவதை விட்டு வெளியேறிவிட்டனர் என்று முன்னோடி விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முந்தைய காலத்தில் 40,000 ஹெக்டேருக்கும் மேல் இரு போகமும் சேர்த்து நெல் சாகுபடி நடைபெற்று வந்தது. ஆனால் இது படிப்படியாக குறைந்து வருகிறது. 2011-12-ல் 17200 ஹெக்டேராக குறைந்த நெல் சாகுபடி பரப்பு, 2012-13-ம் ஆண்டில் 13,676 ஹெக்டேராக சுருங்கி விட்டது. 2013-14-ம் ஆண்டில் 13,172 ஹெக்டேராக சாகுபடி பரப்பு குறைந்துவிட்டது.

நடப்பு ஆண்டில் மேலும் சாகுபடி பரப்பு குறைந்துவிடுமோ என்ற அச்சம் சமூக ஆர்வலர்களிடம் நிலவுகிறது.

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க மாவட்ட நிர்வாகமும், வேளாண்மைத்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதன் மூலமே நெல் சாகுபடி பரப்பு மேலும் குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்று முன்னோடி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

2011-12-ல் 17200 ஹெக்டேராக குறைந்த நெல் சாகுபடி பரப்பு, 2012-13-ம் ஆண்டில் 13,676 ஹெக்டேராக சுருங்கி விட்டது. 2013-14-ம் ஆண்டில் 13,172 ஹெக்டேராக சாகுபடி பரப்பு குறைந்துவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x