

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மீன் உணவு கிடைக்கும் வகையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் சார்பில் முதல் முறையாக தூத்துக்குடியில் மீன் உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் மீன்பிடித் துறைமுகம், மீன் இறங்குதளங்கள் இருந்த போதிலும் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடு ம்போது மீன்களின் விலை அதிகமாகவே இருக்கும். தூத்துக்குடி மக்களுக்கு குறைந்த விலையில் மீன்கள் கிடைக்கும் வகையில் நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள் 2 இடங்களில் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
நிரந்தர நிலையம்
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே மற்றும் சிதம்பர நகர் பஸ் நிறுத்தம் அருகே தொடங்கப்பட்டுள்ள மீன் விற்பனை நிலையங்களில் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் ரூ. 40 ஆயிரம் வரையும், மற்ற நாட்களில் ரூ. 20 ஆயிரம் வரையும் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே கூட்டுறவு சங்க வளாகத்தில் நிரந்தர நவீன மீன் விற்பனை நிலையம் ரூ. 4.95 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், தபால் தந்தி காலனியில் 3-வது நடமாடும் மீன் விற்பனை நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது.
தரமான மீன் உணவு
இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மக்களுக்கு குறைந்த விலையில், தரமான மீன் உணவு கிடைக்கும் வகையில் மீன் உணவகம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. வடக்கு கடற்கரை சாலையில் மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில் இந்த மீன் உணவகம் நேற்று காலை முதல் செயல்பட தொடங்கியுள்ளது.
ஹோட்டல்களில் மீன் உணவு வகைகள் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனை கட்டுப்படுத்தவே இந்த மீன் உணவகம் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீன் சாப்பாடு ரூ.50
தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக துணை மேலாளர் இ. குப்புரங்கன் கூறும்போது, ‘இந்த மீன் உணவகத்தில் மீன் சாப்பாடு ரூ.50-க்கு விற்பனை செய்யப்படும். மீன் சாப்பாட்டில் 450 கிராம் கொண்ட அளவு சாப்பாடு, 2 சிறிய மீன்களுடன் கூடிய குழம்பு, ரசம், மோர், அப்பளம் வழங்கப்படும்.
பொரித்த மீன், கணவாய், இறால் ரூ.50, இறால்-65 ரூ.70, பிஸ் பிங்கர் ரூ.70, மீன் சூப் ரூ. 15, ஒரு தட்டு மீன் கட்லட் ரூ. 40, சில்லி பிஸ் ரூ.70 என மீன் உணவுகள் விற்பனை செய்யப்படும். இந்த மீன் உணவகம் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும்’ என்றார் அவர்.