

பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் மர்மமான முறையில் இறந்தது குறித்து பள்ளிபாளையம் கிழக்கு தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளம் மற்றும் திருச்செங்கோடு மலைக்கோயில் பகுதியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் (23) கடந்த 24-ம் தேதி பள்ளிபாளையம் அடுத்த கிழக்கு தொட்டிபாளையம் என்ற இடத்தில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அரசியல் கட்சியினர், கோகுல்ராஜ், காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினர். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மாணவரின் உடல் நேற்று சிறப்பு மருத்துவக் குழு மூலம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடந்தது.
மேலும் நேற்று சென்னை தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் மனித உரிமைகள் ஆணைய இணை இயக்குநர் பி.ராமசாமி, ஆராய்ச்சி அலுவலர் சி. சந்திரபிரபா தலைமையிலான அதிகாரிகள் மற்றும் திருச்செங்கோடு கோட்டாட்சியர் சுமன், டி.எஸ்.பி இனியன் ஆகியோர் கொண்ட குழுவினர் பள்ளிபாளையம் கிழக்கு தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளம் பகுதியில் ஆய்வு செய்தனர்.
அதையடுத்து, சம்மந்தப்பட்ட மாணவர் கோகுல்ராஜ் வந்து சென்றதாக கூறப்படும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் பகுதியிலும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோயில் வளாகத்தில் உள்ள சிசி டிவி கேமராவில் பதிவான காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது கடந்த 23-ம் தேதி காலை 10.52 மணி முதல் கோயிலுக்குள் நுழைவது முதல் காலை 11.57 மணிக்கு கோயிலில் இருந்து வெளியேறுவது வரையிலான காட்சிகள் பதிவானதை அதிகாரிகள் பார்வையிட்டனர். ஆய்வு மற்றும் விசாரணை அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் கூறும்போது,
"பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி குற்றவியல் நடைமுறை மேற்கொள்ளப்படும். எனினும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும். மாணவர் கோகுல்ராஜ் குடும்பத்தினருக்கு ஆணையத்தின் சார்பில் ரூ.5 லட்சத்து 62 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்" என்றார்.