மருத்துவ படிப்பு சேர்க்கை: கலந்தாய்வில் பழைய மாணவர்கள் பங்கேற்க தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ படிப்பு சேர்க்கை: கலந்தாய்வில் பழைய மாணவர்கள் பங்கேற்க தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
2 min read

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பழைய மாணவர்கள் பங்கேற்க தடை விதிக்கக் கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இது தொடர்பாக நடப்பாண்டில் பிளஸ் 2 படித்த 50-க்கும் மேற் பட்ட மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை முதலில் தனிநீதிபதி விசாரித்து, மருத்துவ கலந்தாய்வில் பழைய மாணவர்கள் பங்கேற்கலாம். ஆனால், அது இவ்வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டப்பட்டது என்று உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து மனுதாரர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் சதீஷ் அக்னி கோத்ரி, எம்.வேணுகோபால் அடங்கிய அமர்வு விசாரித்தது. ‘மருத்துவ கலந்தாய்வை நடத்த லாம். ஆனால், மாணவர் சேர்க்கைக்கான இட ஒதுக்கீட்டு ஆணையை வழங்கக்கூடாது’ என்று உத்தரவிட்டது. இருதரப்பு வாதங்களும் முடிந்த பிறகு நீதிபதி கள் தீர்ப்பை தள்ளிவைத்தனர்.

இந்த நிலையில், இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான விண்ணப்ப விளக்க கையேட்டில், “தொழிற்கல்வி படிப்புகளில் மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்துவதற்காக தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டப்படி பிளஸ் 2 தேர்வில் தகுதியான மதிப்பெண்கள் பெற்றுள்ள அனைவரும் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தாண்டு படித்த மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்படவில்லை. இந்த சட்டத்தை எதிர்த்து மனுதாரர்கள் வழக்கு தொடரவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டை விட கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரி யல் பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். அதனால் பழைய மாணவர்களையும் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதித்தால் 50 சதவீத இடங்கள் அவர்களுக்கே போய்விடும் என்றும், இந்தாண்டு படித்த மாணவர்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே இடங்கள் கிடைக்கும் என்றும் மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதம் ஏற்புடையதாக இல்லை.

மதிப்பெண்கள் எடுப்பதற்கு வினாத்தாள்கள், விடைத்தாள் திருத்துவோர் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இருக்கின்றன. எனவே, கடந்தாண்டு அதிக மாணவர்கள் ‘சென்டம்’ வாங்கியிருக்கிறார்கள் என்பதற்காக அவர்களை மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கக்கூடாது என்று சொன்னால், தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கை பாதிக்கப்படும்.

மருத்துவ படிப்பில் சேருவது என்பது மாணவர்களின் நீண்ட கால கனவு. அதனால், ஒருமுறை மருத்துவ படிப்பில் சேர முடியாவிட்டால், அடுத்தாண்டு சேருவதற்கு அவர்கள் முயற்சிப்பார்கள்.

தகுதியுள்ள அனைத்து மாணவர்களும் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று தமிழ்நாடு தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை சட்டப்பிரிவு 2 (ஜி)-யில் சொல்லப்பட்டிருப்பதால், பழைய மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கக்கூடாது என்று சொல்லி அவர்களை வெளியே தள்ளமுடியாது.

தொழிற்கல்வி படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சட்டத்தை எதிர்த்து இவ்வழக்கு தொடரப்படாத நிலையில், பொது நுழைவுத் தேர்வு மூலம் மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது. எனவே, மனுதாரர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இவ்வாறு உத்தரவில் கூறப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in