

கோயில் பூஜாரி தற்கொலை வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதாரர் ஓ.ராஜா, தேனி நீதிமன்றத்தில் 3 வாரங்களில் சரணடைய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த என்.சுப்புராஜ் என்பவர் மகன் நாகமுத்து. கைலாசப்பட்டி கைலாசநாதர் கோயிலில் பூஜாரியாகப் பணிபுரிந்த இவர், 7.12.2012-ல் தற்கொலை செய்து கொண்டார்.
இவரை தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரும், பெரியகுளம் முன்னாள் நகரசபைத் தலைவருமான ஓ.ராஜா, பாண்டி உட்பட 7 பேர் மீது தென்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார், பெரியகுளம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், ஓ.ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் தேனி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஓ.ராஜா ஜாமீன் பெற வேண்டும்.
இதைத் தொடர்ந்து நீதி மன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் மனு தாக்கல் செய்யும்போது, அதே நாளில் உத்தரவு பிறப்பிக்க தேனி நீதிமன்றத்துக்கு உத்தரவிடக்கோரி ஓ.ராஜா, பாண்டி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. ஓ.ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.காந்தி, இந்த வழக்கில் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதால், ஓ.ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த வழக்கில் புகார்தாரரிடம் ஏற்கெனவே கருத்து பெற்று மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது என்றார்.
அரசு தரப்பில் வழக்கறிஞர் பிரபா வாதிட்டார். பூஜாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் தரப்பில் ஓ.ராஜாவின் மனுவை ஏற்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்து வழக்கறிஞர் பி.ரத்தினம் மனு தாக்கல் செய்தார்.
விசாரணைக்குப்பின், ஓ.ராஜா உள்ளிட்ட இருவரும் பெரியகுளம் நீதிமன்றத்தில் 3 வாரங்களில் சரண் அடைய வேண்டும். அப்போது அவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்தால், அந்த ஜாமீன் மனுக்களை அன்றைய தினமே தகுதி அடிப்படையில் விசாரித்து நீதித்துறை நடுவர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஜாமீன் மனு விசாரணையின்போது பூஜாரி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கலாம் என நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உத்தரவிட்டார்.