

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு ஆனர்ஸ் சட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு 29-ம் தேதி தொடங்குகிறது.
சென்னையில் உள்ள தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இயங்கும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் பிஏ.எல்எல்பி, பிகாம்.எல்எல்பி, பிபிஏ.எல்எல்பி, பிசிஏ.எல்எல்பி ஆகிய 5 ஆண்டு கால ஆனர்ஸ் சட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளின் தரவரிசைப் பட்டியலை சட்ட பல்கலைக்கழகம் இணையதளத்தில் (>www.tndalu.ac.in) வெளியிட்டுள்ளது.
கலந்தாய்வு 29-ம் தேதி (திங்கள் கிழமை) தொடங்கி ஜூலை 1-ம் தேதி வரை சென்னையில் உள்ள சட்ட பல்கலைக்கழக கூட்டரங்கில் நடைபெறும். கலந்தாய்வுக்கான அழைப்புக்கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் நேரில் வந்து மாற்று அழைப்புக் கடிதத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால் பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தலைவர் பேராசிரியர் எம்.எஸ்.சவுந்தர பாண்டியன் தெரிவித்துள்ளார்.