தாமதமாகும் ஹாரிங்டன் சாலை பணிகள்

தாமதமாகும் ஹாரிங்டன் சாலை பணிகள்
Updated on
1 min read

சென்னையின் மாதிரி சாலையாக வடிவமைக்கப்பட்டு வரும் ஹாரிங்டன் சாலையில் பணிகள் தொடங்கி ஓர் ஆண்டுக்கு மேலாகியும் இன்னும் முடிக்கப்படவில்லை.

சென்னையில் உள்ள பல சாலைகளில் வாகனங்களும், பாதசாரிகளும் ஒரே நேரத்தில் இடையூறு இல்லாமல் செல்வதற்கான வசதியில்லை. ஆனால், ஹாரிங்டன் சாலையில் பாதசாரிகள், வாகன ஓட்டிகள், மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் ஒருவரை ஒருவர் தொந்தரவு செய்யாமல் சாலையை பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. போதிய நிழல், வெளிச்சம், வாகன நிறுத்தும் வசதி போன்றவையும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சாலை 750 மீட்டர் நீளம் கொண்டது. இதில் வாகனங்கள் செல்வதற்கு இரு புறமும் தலா 5.75 மீட்டர் இடம் அளிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் வளைவுகளில் முந்திச் செல்வதை தடுக்க, இந்த அகலம் சாலை முழுவதும் சீராக பராமரிக்கப்பட்டுள்ளது.

சாலையின் இருபுறமும் 2.5 மீட்டர் முதல் 4.5 மீட்டர் வரையிலான அகலத்தில் கிரானைட் நடைபாதைகள் உள்ளன. நடைபாதைகளை ஒட்டி கம்பியாலான கைப்பிடிகள் உள்ளதால், வாகன ஓட்டிகள் நடைபாதைகளை பயன்படுத்துவதை தவிர்க்க முடியும். நடைபாதையில் தேவைப்படும் இடங்களில் சாய்தளங்கள் இருப்பதால், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியாக இருக்கும். நடைபாதைகளில் உள்ள மரங்களை சுற்றி மழை நீர் உட்புகுவதற்கு போதிய இடைவெளி அளிக்கப்படுகிறது.

ஹாரிங்டன் சாலையில் 13 பள்ளிக்கூடங்கள் உள்ளதால், 15 இடங்களில் வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சாலையை அழகு படுத்துவதற்காக, 0.9 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டு வரும் சாலை தடுப்பான்களில் பூச்செடிகள் வைக்கப்படவுள்ளன. இதில் தெரு விளக்குகளும் இருக்கும்.

மின் இணைப்புகள், மழைநீர், கழிவுநீர் இணைப்புகளுக்கு சாலை ஓரங்களில் தனித்தனி வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த சாலையை தோண்ட வேண்டிய அவசியம் ஏற்படாது என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். இது வரை, கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு, ஒரு புறம் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் இன்னமும் முடிக்கப்படவில்லை.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறும்போது, “ரூ.9.9 கோடி செலவில் கடந்த மே மாதம் பணிகள் தொடங்கினாலும், இதில் ஒரு வழி போக்குவரத்து இருந்து வந்தது. டிசம்பர் மாத இறுதியில்தான் போக்குவரத்து காவல்துறை அனுமதி கிடைத்தது. தற்போது கான்கிரீட் சாலை போடும் பணிகள் முடிந்துள்ளதால் மீண்டும் இருவழி போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் முடிக்கப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in