Published : 08 Jun 2015 06:00 PM
Last Updated : 08 Jun 2015 06:00 PM

மாட்டுத்தாவணியில் ரூ.1.20 கோடி வீண்: முடங்கி கிடக்கும் ‘ஆட்டோ, கார் பே’ திட்டம்

மதுரை மாட்டுத்தாவணியில் ரூ.1.20 கோடியில் அமைக்கப்பட்டு, திறப்பு விழா நடத்தப்பட்ட ஆட்டோ கார் பே திட்டம் ஒன்றரை ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது.

மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு சுமார் 2 லட்சம் பயணிகள் வருகின்றனர். நூற்றுக்கணக்கான வாடகை ஆட்டோக்கள், கார்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. ஆங்காங்கே இவற்றை நிறுத்தி எடுத்துச் செல்வதால் நெரிசல் ஏற்படுவதாகவும், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் பயணிகள் புகார் தெரிவித்தனர்.

எனவே இவற்றை முறைப்படுத் துவதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.1.20 கோடியில் பஸ் நிலைய முன் பகுதியில் ஆட்டோ, கார்களுக்கென தனித்தனி பே (நிறுத்துமிடம்) அமைக்கப்பட்டன. அங்கு கணினியுடன் கூடிய பதிவு மையங்களும் ஏற்படுத்தப்பட்டன. 19.11.2013-ம் தேதி மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா இவற்றை திறந்து வைத்தார்.

ஆனாலும், இங்கிருந்து மாநகரிலுள்ள பிற இடங்களுக்குச் செல்ல எவ்வளவு கட்டணம் என்ற விவரங்களை அறிவிக்கவில்லை. மேலும், இங்கு ஆட்டோக்களை வரிசையாக நிறுத்துவதற்காக அமைத்துள்ள தடுப்புகளிலிருந்து, அவசரமாக வெளியேற வசதி செய்து தரப்படவில்லை. மேலும் கார்கள், ஆட்டோக்களுக்கு நுழைவுக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. இவற்றால் இத்திட்டம் ஒரு வாரம்கூட செயல்படாமல் முடங்கியது.

இதிலுள்ள பிரச்சினைகளை சரி செய்து, மீண்டும் இத்திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென மாநகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தினர். மேயர், ஆணையர் அவ்வப்போது அங்கு சென்று ஆய்வு செய்வர். ஆனால் அதன்பின் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதனால் திறப்பு விழா காணப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும், இத்திட்டம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, அடிப்படை கட்டமைப்புகளை நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டோம். கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமை ஆட்சியர், காவல்துறையினர், வட்டார போக்குவரத்து துறையினர் வசமே உள்ளது. எனவே அவர்கள்தான் ஆட்டோ ஓட்டுநர்களுடன் பேசி இவ்விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்றனர்.

மாட்டுத்தாவணி ஆட்டோ ஓட்டுநர்கள் கூறும்போது, எங்களுக்கு பாதிப்பு ஏற்படாத அளவுக்கு பயணக் கட்டணம் நிர்ணயித்தால் மட்டுமே நாங்கள் ஏற்றுக்கொள்வோம். மேலும் இங்கு ஆட்டோக்களை நிறுத்தி எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சினைகளையும் சரி செய்து தர வேண்டும் என்றனர்.

அதிகாரிகளின் அலட்சியத்தால் ரூ 1.20 கோடியில் அமைக்கப்பட்ட இத்திட்டம் வீணாக கிடப்பதாகவும், விரைவில் இதை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x