

மத்திய அரசின் நேரடி மானிய திட்டத்தில் புதிதாக இணைந்து முந்தைய மாதத்துக்கான காஸ் மானியத் தொகையை பெறுவதற்கான காலக்கெடு வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது.
காஸ் சிலிண்டர் பயன்படுத்தும் நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக மானிய தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தி வருகிறது. இதனால் நுகர்வோர்களுக்கு ரூ.620 என்ற சந்தை விலையிலேயே சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தில் இணைந்தவர்களின் வங்கிக் கணக்கில் மானிய தொகையை மத்திய அரசு நேரடியாக செலுத்தி வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 55 லட்சம் பேர் காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் தற் போது 1 கோடியே 35 லட்சம் பேர் மட்டுமே நேரடி மானிய திட்டத்தில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் நேரடி எரிவாயு மானிய திட்டத்தில் புதிதாக இணைந்து அதற்கு முந்தை மாதங்களுக்கான மானிய தொகையை பெறுவதற்கான காலக்கெடு வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உயர் அதிகாரிகள் கூறும்போது, “நேரடி எரிவாயு மானிய திட்டத்தில் தற்போது வரை பலர் சேராமல் உள்ளனர். இவர்கள் உடனடியாக இத்திட்டத்தில் இணைந்தால்தான் அவர்களுக்கு அதற்கு முந்தைய மாதத்துக்கான மானிய தொகை கிடைக்கும்.
கடைசி நாள் ஜூன் 30 என்பதால் 3 நாட்களுக்கு முன்பாக, அதாவது இன்றே பூர்த்தி செய்து கொடுத்தால்தான் நுகர்வோரின் எரிவாயு கணக்கை சரிபார்த்து திட்டத்தில் இணைக்க முடியும். படிவம் பூர்த்தி செய்து கொடுத்த நுகர்வோர், திட்டத்தில் முழுமை யாக இணைக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர்களின் தொலை பேசியில் குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கப்படும்.
ஜூலை மாதம் முதல் நேரடி எரிவாயு மானிய திட்டத்தில் இணையும் நுகர்வோர்களுக்கு அந்த மாதத்துக்கான மானிய தொகை மட்டுமே வழங்கப்படும். அதற்கு முந்தைய மாதத்துக்கான மானிய தொகை கிடைக்காது” என்று அவர்கள் கூறினார்கள்.