

செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கலால் டிஎஸ்பி தங்கவேலு வேலூர் மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலூர் பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் சின்னபையன் (45) கடந்த மாதம் 26-ம் தேதி கொலை செய்யப்பட்டார். ஆம்பூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், செம்மரக் கடத்தல் கும்பலுடன் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கொலை வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். செம்மரக் கடத்தல் வழக்கில் வேலூரைச் சேர்ந்த நாகேந்திரன், அவரது மனைவி ஜோதிலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 3-வது குற்றவாளியாக வேலூர் மாவட்ட கலால் டிஎஸ்பி தங்கவேலு சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், காட்பாடியில் பதுங்கியிருந்ததாக டிஎஸ்பி தங்க வேலுவை நேற்று முன்தினம் தனிப்படை போலீஸார் கைது செய் தனர். இதையடுத்து பரதராமி காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட டிஎஸ்பி தங்க வேலுவிடம் வேலூர் சரக டிஐஜி தமிழ்ச்சந்திரன், வேலூர் எஸ்பி செந்தில்குமாரி ஆகியோர் தனித் தனியாக விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
இந்த வழக்குக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், செம்மரக் கடத்தல் வழக்கில் இடைத்தரகர் போலவே தான் செயல்பட்டு வந்ததாகவும் டிஐஜி மற்றும் எஸ்பியிடம் டிஎஸ்பி தங்கவேலு தெரிவித்தார் இந்த வழக்கில் இருந்து தன்னை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என்று இரு அதிகாரிகளிடமும் டிஎஸ்பி தங்கவேலு கதறி அழுதாராம். இதையடுத்து, டிஎஸ்பியை பலத்த பாதுகாப்புடன், ஆம்பூர் மாஜிஸ்திரேட் ஆனந்தராஜ் வீட்டில் தனிப்படை போலீஸார் ஆஜர்படுத்தினர்.
தங்கவேலுவை ஜூன் 25-ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ஆனந்தராஜ் உத்தர விட்டார். இதையடுத்து ஆம்பூரில் இருந்து அழைத்து வரப்பட்ட தங்கவேலு, நேற்று அதிகாலை வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.