

அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்தக்கோரி சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
நீதிபதி எஸ்.ஏ.சிங்காரவேலு கமிட்டி நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரி நிர்வாகத்தை அரசே ஏற்க வலியுறுத்தி இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அந்த கட்சியின் நிறுவனத் தலைவர் தி.தேவநாதன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர்கள் குணசீலன், சாலமன் மோகன்தாஸ் உட்பட ஏராளமான பெற்றோர், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மாணவர் அமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த தேவநாதன் நிருபர்களிடம் கூறும்போது, “அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி, கல்லூரிகளை அரசுடைமையாக்க வேண்டும். கல்விக் கொள்ளையை தடுக்க அரசுடைமையாக்கும் நடவடிக்கைதான் ஒரே வழி. இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் அடுத்த கட்டமாக சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளுக்குச் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்” என்றார்.