Published : 23 Jan 2014 05:41 PM
Last Updated : 23 Jan 2014 05:41 PM

மோடியா? ராகுலா? - விஜயகாந்த் விடை காண தமிழருவி மணியன் வேண்டுகோள்

மாநிலங்கள் அவையின் ஒரு இடத்துக்காக திமுகவிடம் இடறி விழ வேண்டாம் என்று தேமுதிகவுக்கு வலியுறுத்தி, விஜயகாந்துக்கு தமிழருவி மணியன் இறுதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தேர்தல் அரசியலில், முரண்பட்ட கொள்கைகள் உடைய கட்சிகளின் கூட்டணிகள் அமைவது இயல்பாகி விட்ட நிலையில் சித்தாந்த அரசியல் சீரழிந்து, தேர்தல் வெற்றி மட்டுமே கட்சிகளின் மந்திர கோஷமாக மாறிவிட்டது.

தீவிர சித்தாந்தம் பேசும் இடதுசாரி இயக்கங்களே, இரண்டு தொகுதிகளுக்காக போயஸ் தோட்டத்திலும், கோபாலபுரத்திலும் மாறி, மாறி கையேந்தி நிற்பதைக் காணும் போது, ஆதாய அரசியல் நடத்தும் மற்ற கட்சிகளைக் குறை கூறுவதில் எந்தப் பயனும் இல்லை.

சந்தர்ப்பவாதமும், தன்னிலை தாழ்ந்து வெற்றியைத் தேடிக்கொள்ளும் வேட்கையும் உள்ள கட்சிகள், சில நேரங்களிலாவது நாட்டு நலன்களை முன்னிறுத்தி முடிவு எடுக்க வேண்டும்.

இன்றைய இந்திய வாக்காளர்களின் முதல்கடமை, ஊழலுக்கு அன்றாடம் உற்சவம் நடத்தும் காங்கிரஸ் கூட்டணி அரசை மத்தியிலிருந்து அகற்றுவதுதான். மூன்றாவது அணி என்பது நம் கண்களை ஏமாற்றும் மாரிச மானாகத் தான் காட்சி தருகிறது. மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ பாஜகவை இந்த முறை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. வகுப்புவாதம் என்ற தவறுகளை மூடி மறைக்கும் காங்கிரசின் அரசியல் விளையாட்டில் சிறுபான்மை மக்கள் ஏமாந்து விடக் கூடாது.

தமிழகத்தில் பாஜகவுடன் மதிமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைத் தொடங்கிவிட்டது. காலம் மிக குறுகியது. இனியும் விஜயகாந்த் மவுனம் சாதிப்பது அழகன்று. எல்லாக் கட்சிகளும் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறன என்று சொல்வதில் எந்தப் பெருமையும் இல்லை. ஊழலுக்கு எதிராக யுத்தம் நடத்தப் போவதாக பிரகடனம் செய்திருக்கும் விஜயகாந்த் முன்பு, இரண்டே வாய்ப்புகள் தான் உள்ளன.

பாஜக கூட்டணியில் இடம் பெற்று ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலவேண்டும் அல்லது தனியாக களம் இறங்க வேண்டும். நடக்கவிருப்பது நாடாளுமன்றத் தேர்தல். யார் பிரதமர் என்பது தான் மக்கள் முன் நிற்கும் ஒரே கேள்வி. மோடியா? ராகுலா? என்ற கேள்விக்கு விஜயகாந்த் விரைவில் விடை காண வேண்டும்.

மாநிலங்களவையில் ஓர் இடத்தைப் பெறும் ஆசையில் திமுகவிடம் இடறி விழுந்தால், அதற்குப் பின்பு ஊழலை எதிர்க்கும் தார்மீக வலிமையை விஜயகாந்த் முற்றிலுமாக இழந்துவிடுவார். இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக முகம் காட்டியதால் தான், மக்களின் வரவேற்பு அவருக்கு வாய்த்தது.

எப்படியாவது எழுந்து நிற்க முயலும் திமுகவை, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்திவிட்டால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக வலிமையுடன் போராடுவதற்கான வாய்ப்பு கனியும். விஜயகாந்துக்கு இதற்கு மேல் சொல்வதற்கு என்னிடம் வார்த்தை இல்லை. இதுவே விஜயகாந்துக்கு நான் வழங்கும் இறுதியான வேண்டுகோள்" என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x