காஞ்சிபுரம் அருகே தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி

காஞ்சிபுரம் அருகே தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி
Updated on
1 min read

ஓட்டேரியை அடுத்த கொளப்பாக்கம் அருகே உள்ள தனியார் தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி நேற்று உயிரிழந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஓட்டேரியை அடுத்த கொளப்பாக்கம் அருகே தனியார் தோல் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.

பிளாஸ்டிக் தொட்டி

இந்த தொழிற்சாலையின் உள்ளே, 20 அடி உயரம் மற்றும் 4 அடி அகலத்தில் பிளாஸ்டிக் கழிவுநீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியை, துப்புரவு தொழிலாளர்கள் வாரம் ஒருமுறை சுத்தம் செய்வது வழக்கம்.

விஷவாயு தாக்கியது

இந்நிலையில், கொளப்பாக்கம் கிராமம் பஜனைகோயில் தெரு வைச் சேர்ந்த ஏழுமலை (22), முரளிதரன் (36) ஆகியோர் நேற்று இந்த கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கழிவுநீர் தொட்டியிலிருந்த விஷவாயு தாக்கியதில், இருவரும் மயக்கமடைந்து தொட்டியின் உள்ளே விழுந்தனர். அருகில் இருந்த சக தொழிலாளர்கள், கூச்சலிட்டு தொட்டியினுள் இறங்கி அவர்களை மீட்டனர்.

இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், இருவரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த ஓட்டேரி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். மேலும், உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in