

பள்ளிக் கல்வியில் தமிழ் மொழிக்கு எதிரான ஆங்கில வழி கல்வித் திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மதிமுக வலியுறுத்தியுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள், உயர் நிலைக்குழு, ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் இன்று சென்னை தாயகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
* எளிய குடும்பத்தில் பிறந்து, ஒரு துறவியாகவே வாழ்ந்து, தனது தலைமைப் பண்பை நாட்டின் கோடானுகோடி மக்கள் மனதில் பதிய வைத்து, உன்னதமான வெற்றியை ஈட்டி, இந்தியாவின் 15 ஆவது பிரதமராகப் பொறுப்பு ஏற்று உள்ள நரேந்திர மோடிக்கு மதிமுக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
* நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்கு அளித்து வரலாற்றுச் சிறப்புக்குரிய வெற்றியை வழங்கிய இந்திய நாட்டின் வாக்காளப் பெருமக்களுக்கும், தமிழ்நாட்டில் அக்கூட்டணியில் இடம் பெற்று இருந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு, 75 இலட்சத்து 24 ஆயிரம் வாக்குகளை வழங்கிய தமிழக வாக்காளர்களுக்கும் இக்கூட்டம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
* பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்துகொண்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மே 26 ஆம் நாள் டெல்லி ஜந்தர் மந்தரில் கருப்புக்கொடி அறப்போரை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அவர்களுக்கு இக்கூட்டம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
மோடிக்கு பாராட்டு
* மே 26 ஆம் தேதி அன்று மாலை ஆறு மணி அளவில் நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்றார். 27 ஆம் தேதி கூடிய அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே மிகவும் மெச்சத்தக்க முடிவு எடுக்கப்பட்டது. கறுப்புப் பணத்தை மீட்க, உச்ச நீதிமன்ற ஆணையின்படி ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதன் துணைத் தலைவராக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அர்ஜித் பசாயத் பதவி வகிப்பார். வருவாய் உளவுப் பிரிவு இயக்குநர், போதைப் பொருள் தடுப்புத்துறையின் இயக்குநர், பொருளாதார உளவுப் பிரிவின் இயக்குநர், மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்தின் இணைச் செயலர் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம் பெறுகிறார்கள்.
'இந்தியப் பொருளாதாரத்தைப் பாழ்படுத்தும் கறுப்புப் பணத்தை மீட்பேன்' என்று தேர்தல் பிரச்சாரத்தில் தான் கூறியதை பிரதமர் நரேந்திர மோடி, தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே நிறைவேற்றியதற்கு, இக்கூட்டம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
தேசிய நதிகளாக அறிவிக்க வேண்டும்...
கேரள அரசு இந்திய இறையாண்மைக்கு எதிராகச் சட்டம் நிறைவேற்றியதைக் கண்டித்து, கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கடமையில் தவறியதோடு, குதிரை கீழே தள்ளியதோடு குழியும் பறித்ததைப் போல, எந்த அக்கிரமமான சட்டத்தைக் கேரள அரசு நிறைவேற்றியதோ, அதே சட்டத்தை மத்திய அரசுச் சட்டமாகவே ஆக்குவதற்காக, மத்திய அரசுப் பணிகளில் உள்ள கேரளத்தினரின் சதிச்செயலுக்கு உடன்பட்டு, 'அணைப் பாதுகாப்புச் சட்டம்' என்ற மிகக் கேடான ஒரு சட்டத்தை நிறைவேற்ற முனைந்து, அணைப் பாதுகாப்பு மசோதாவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வரைந்தது.
ஒரு மாநிலத்தில் கட்டப்பட்டு உள்ள நீர்த்தேக்கங்கள் குறித்து, அம்மாநிலமே எந்த முடிவும் எடுத்துக் கொள்ளலாம் என்ற அந்தத் தீங்கான அணைப் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதைக் கைவிட வேண்டும் என்றும், ரத்துச் செய்ய வேண்டும் என்றும், தேசிய நெடுஞ்சாலைகளைப் போன்று, மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்ற நதிகளை, தேசிய நதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் நரேந்திர மோடி அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.
நதிகளை இணைக்கும் திட்டம்....
* கடந்த மே 19 ஆம் நாள், நரேந்திர மோடி வைகோ நேரில் சந்தித்து, 'நதிகள் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்' என்று கேட்டுக்கொண்டபோது, 'தனது அரசு அதைச் செயல்படுத்தும்' என்று உறுதி அளித்தார். தீபகற்ப நதிகளை இணைக்கின்ற திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.
தமிழக அரசுக்கு வலியுறுத்தல்...
* தமிழக அரசு, 2013-14 கல்வி ஆண்டில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகளைத் தொடங்குவதற்குத் திட்டமிட்டு, முதற்கட்டமாக ஒன்றாம் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் ஆங்கில வழிப் பிரிவுகளைத் தொடங்கியது. நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) இரண்டாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பிலும் ஆங்கில வழிப் பிரிவுகளைத் தொடங்க உள்ளது.
இதன்மூலம், பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக் கல்வியில் தமிழைப் பயிற்று மொழி நிலையில் இருந்து முற்றாக நீக்கிவிடும் போக்கில் தமிழக அரசு தீவிரமாகச் செயல்படுவது கண்டனத்திற்குரியது ஆகும். இந்நடவடிக்கை முழுக்க முழுக்கத் தமிழ் மொழிக்கு எதிரானதாகும்.
தாய்மொழி வழிக் கல்வியை இழந்துவிட்டால், தமிழ் இனம் தனது அடையாளத்தையும் பண்பாட்டு விழுமியங்களையும் முற்றாக இழந்துவிடும் கேடு நேர்ந்துவிடும். எனவே, தமிழ் மொழிக்கு எதிரான, ஆங்கில வழி கல்வித் திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.