

வீட்டுக் கடனை உயர்த்தி வழங் குதல், கருணை அடிப்படையில் வேலை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாளை (24-ம் தேதி) நடத்த இருந்த ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைக் கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
வங்கி ஊழியர்களுக்கு அளிக்கப் படும் வீட்டுக் கடன் வசதியை உயர்த்தி வழங்க வேண்டும். இறந்த வங்கி ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். வங்கி ஊழியர்கள் சங்கத்துக்கு எதிராக எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகம் மேற்கொண்டு வரும் விரோதப்போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் மாநில வங்கி ஊழியர்கள் சங்கம் இணைந்து ஜூன் 24-ம் தேதி (நாளை) ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அரசு அதிகாரி களின் கவனத்துக்கு கொண்டு சென்று இப்பிரச்சினையை தீர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஜூன் 24-ம் தேதி நடத்த இருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு வெங்கடாச்சலம் கூறினார்.