

சிஎஸ்ஐஆர் நெட் தகுதித்தேர்வு நாடு முழுவதும் இன்று நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, காரைக்குடி ஆகிய இடங்களில் இந்தத் தேர்வு நடக்கிறது.
கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பாடப் பிரிவுகளைச் சேர்ந்த முதுகலை பட்டதாரிகள் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) அமைப்பு நடத்துகிற “நெட்” தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
சிஎஸ்ஐஆர் நெட் தேர்வும் யுஜிசி நெட் தேர்வைப் போன்றே ஆண்டுக்கு 2 தடவை (ஜூன், டிசம்பர்) நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதலாவது நெட் தகுதித்தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, காரைக்குடி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் இந்தத் தேர்வு நடக்கிறது.
காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரு தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றொரு தேர்வும் நடைபெறும் என்று சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.