

திருத்தணி நகராட்சி 13-வது வார்டு கவுன்சிலர் ஆறுமுகம். அதிமுகவைச் சேர்ந்த இவர், மாவட்டத் திட்டக் குழு உறுப்பினரா கவும் உள்ளார். இவர், கடந்த மாதம் 23-ம் தேதி, திருத்தணி பஸ் நிலையம் அருகேயுள்ள ஏடிஎம் மையம் அருகே தனது காரை நிறுத்திக்கொண்டு ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது, ஏடிஎம்-ல் பணம் எடுக்க வந்த தனியார் கல்லூரிப் பேராசிரியர் தமிழுக்கும், ஆறுமுகம் தரப்பின ருக்கும் இடையே வாக்குவாதம் நேரிட்டது.
இதில், ஆறுமுகம் உள்ளிட்டோர் தமிழைத் தாக்கியதுடன், அந்த வழியாக ஆட்டோ ஓட்டி வந்த நாகராஜ் என்பவரை மிரட்டி, அதே ஆட்டோவில் தமிழைக் கடத்திச் சென்று தனியிடத்தில் வைத்து சரமாரியாகத் தாக்கி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்தப் புகாரின்பேரில் ஆட்டோ டிரைவர் நாகராஜ் மற்றும் ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் 3 பேர் என 4 பேரை திருத்தணி போலீஸார் கைது செய்தனர். ஆனால், கவுன்சிலர் ஆறுமுகம் இதுவரை கைது செய்யப் படவில்லை.
அவரை போலீஸார் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தினர் நேற்று திருத்தணி நகரில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.