

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அருண்பாண்டியன். பிரபல நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான இவர், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்தவர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்டபோது, பேராவூரணி தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டு, திருநெல்வேலி மாவட்டம் இலஞ்சி பகுதியைச் சேர்ந்தவரும் சென்னையில் வசிப்பவருமான நடிகர் அருண்பாண்டியன் இங்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
பேராவூரணி தொகுதியை எதிர்பார்த்து கொண்டிருந்த உள்ளூர் அதிமுகவினர், தேமுதிகவுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்தனர். அவர்களை மாவட்ட செயலாளரும், தற்போதைய அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம் சமாதானப்படுத்தி, அருண்பாண்டியனுக்காக தேர்தல் பணியாற்றச் செய்தார். அதேபோல, உள்ளூரில் வேட்பாளர்கள் இருக்கும்போது, வெளியூர் வேட்பாளரை இறக்குமதி செய்வதா எனக் கேள்வி எழுப்பிய தேமுதிகவினரை "நானே பேராவூரணியில் போட்டியிடுவதாக நினைத்து இவரை வெற்றி பெறச் செய்யுங்கள்" என விஜயகாந்த் கேட்டுக்கொண்டார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது "நான் வெற்றி பெற்றால் பேராவூரணியில் வீடு எடுத்து தங்கியிருந்து, மக்கள் பணி ஆற்றுவேன்" என்று கூறி வென்றார் அருண்பாண்டியன்.
எம்எல்ஏ-வான சிறிது காலத்திலேயே கட்சித் தலைவர் விஜயகாந்தை எதிர்த்துக் கொண்டு அதிமுக ஆதரவு எம்எல்ஏவாக செயல்படத் தொடங்கினார்.
இந்நிலையில், இவர் பேராவூரணி தொகுதியில் பெரும்பாலும் தலைகாட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்துவருகிறது.
"இந்த 4 ஆண்டுகளில் அருண்பாண்டியன் அதிகபட்சமாக ஏழெட்டு முறை மட்டுமே தொகுதியில் தலைகாட்டி இருப்பார். தொகுதியில் நிலவும் பிரச்சினை குறித்து முறையிட, அவரது எம்எல்ஏ அலுவலகத்தில் சென்று விசாரித்தால், "உங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதித் தாருங்கள். நாங்கள் ஆன்-லைனில் அனுப்பி விடுவோம் என்கின்றனர். நாங்கள் நேரில் பார்க்க முடியாத எம்எல்ஏ எங்களுக்கு எதற்கு" என பொருமுகின்றனர் தொகுதி மக்கள்.
மக்களின் குறைகளை கேட்கப் பிரதிநிதியும் இல்லை. தொகுதியில் வளர்ச்சிப் பணிகளும் நடக்கவில்லை எனக் குமுறும் பேராவூரணி பகுதி இளைஞர்கள், முகநூல் உள்ளிட்ட வலைதளங்களில் தங்கள் எம்எல்ஏ-வான அருண்பாண்டியனை காய்ச்சி எடுத்து வருகின்றனர்.
முகநூலில், காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு, "தொகுதி எம்எல்ஏ அருண்பாண்டியனை காணவில்லை. கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.10,000 பரிசு" என கிண்டலடித்து வெளியிட்ட பதிவு, இப்பகுதி மக்களிடமும், இங்கிருந்து வெளிநாடுகள் சென்று வசிப்பவரிகளிடமும் காட்டுத் தீயாகப் பரவி வருவதாகக் கூறுகின்றனர் இப்பகுதி இளைஞர்கள்.
இவரைப் போன்ற எம்எல்ஏக்கள், இனியாவது தொகுதிக்கு வந்து மக்களை சந்தித்து, அவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.