தி.மு.க.வில் இருக்கவே விருப்பம்: மு.க. அழகிரி பிரத்யேகப் பேட்டி

தி.மு.க.வில் இருக்கவே விருப்பம்: மு.க. அழகிரி பிரத்யேகப் பேட்டி
Updated on
1 min read

திமுகவில் இருந்துகொண்டே தொடர்ந்து மக்கள் பணியாற்ற விரும்புவதாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

தனது ஆதரவாளர் கே.பி. ராமலிங்கம், எம்.பி.யுடன், மு.க.அழகிரி கடந்த வியாழக்கிழமை டெல்லிக்குச் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். மேலும், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கையும் அழகிரி சந்தித்துப் பேசினார். இந்நிலையில், திமுகவுக்கு எதிராகப் புதிய கட்சியைத் தொடங்குவாரா என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதற்கிடையில் நடிகர் ரஜினி காந்தை சென்னையில் அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை திடீரென சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்து மு.க. அழகிரி 'தி இந்து'வுக்கு அளித்த பேட்டி:

ரஜினிகாந்தைச் சந்தித்ததின் நோக்கம் என்ன?

அவர் நடித்த 'கோச்சடையான்' திரைப்படம் வெளிவர உள்ள நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். நாங்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள். தனிப்பட்ட முறையில் பல்வேறு விஷயங்களைப் பேசிக்கொண் டோம். அதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாது.

சமீப காலமாக மிக முக்கியப் பிரமுகர்களை எல்லாம் சந்தித்து வருகிறீர்களே. இதில் ஏதாவது அரசியல் நோக்கம் உள்ளதா?

எனது நண்பர்களை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கிறேன்.

நீங்கள் புதிய கட்சி தொடங்கப் போவதாகவும் திமுகவை எதிர்த்துத் தேர்தல் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் செய்திகள் வருகிறதே?

தற்போது புதிய கட்சி தொடங்கும் முடிவை எடுக்கவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் பேசி முடிவு எடுப்பேன்.

சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை விடுத்திருக்கிறீர்களா?

இதுவரை அப்படி எதுவும் நான் கோரிக்கை வைக்கவில்லை.

உங்கள் மீதான நடவடிக்கைக்கு விளக்கம் அளித்து கட்சியில் சேருவீர்களா?

என்னிடமோ எனது ஆதரவாளர்களிடமோ கட்சித் தலைமை எந்தவித விளக்கமும் கேட்கவில்லை. நானும் எந்த விளக் கமும் கொடுக்கத் தயாராக இல்லை. நானோ எனது ஆதரவாளர்களோ எந்தத் தவறும் செய்யவில்லை. அதனால் அவர்களிடம் நான் மன்னிப்புக் கேட்கவோ, விளக்கம் கொடுக்கவோ அவசியம் இல்லை. திமுக வேட்பாளர் தேர்வில் என்ன நடந்திருக்கிறது என உங்களுக்குத் தெரியும். தஞ்சாவூரில் வேட் பாளரை எதிர்த்து உருவப் பொம்மை எரித்து, கட்சிக்கு எதிராகப் பெரிய போராட்டமே நடத்தியிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரண மானவர்கள் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், கட்சிக்கு எதிராகவோ வேறு வகையிலோ எந்தத் தவறும் செய்யாத எங்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இதுதான் திமுகவில் இப்போது இருக்கிற ஜனநாயகம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் வேறு கட்சியில் சேருவீர்களா? அல்லது திமுகவிலேயே இருக்க விரும்புகிறீர்களா?

நானும் எனது ஆதரவாளர்களும் தொடர்ந்து திமுகவில்தான் நீடிக்க விரும்புகிறோம். கட்சியில் இருந்து கொண்டே மக்கள் பணியாற்ற நினைக்கிறோம். வேறு எந்த முடிவும் தற்போது எடுக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in