

தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் தனது தலைமையில் மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவான மு.க.ஸ்டாலின் நேற்று தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது, சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்றும், குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும், பல நாட்கள் குடிநீர் வருவதில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
கொளத்தூரில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். போர்க்கால அடிப்படையில் இதற்கு தீர்வு காண வேண்டிய அரசு மெத்தனம் காட்டி வருகிறது. குடிநீர் பிரச்சினைக்கு அதிமுக அரசு உடனடியாக தீர்வு காணாவிட்டால் எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும். தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து வருகிறேன். 2016-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.