

பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக மெட்ரோ ரயில் சேவை இருக்கும் என்றும் ஒரு ரயிலில் 1,400 பேர் பயணம் செய்யலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை கோயம்பேடு ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்குகிறது. மெட்ரோ ரயிலில் உள்ள வசதிகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
மெட்ரோ ரயில் பெட்டிகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பயணிகளுக்கும் அதிநவீன பாதுகாப்பு மற்றும் வசதிகள் அளிக்கும் வகையில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் செல்லும் வழித்தடங்களின் வரைபடம் அனைத்து பெட்டியிலும் இருக்கும்.
ஒரு மெட்ரோ ரயிலில் 4 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 350 பேர் வீதம் ஒரு ரயிலில் 1,400 பேர் பயணம் செய்ய முடியும். முதல்கட்டமாக சராசரியாக 35 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்படும். கோயம்பேடு - ஆலந்தூர் இடையே பயணம் நேரம் 19 நிமிடங்களாக இருக்கும். ஆரம்பத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். பின்னர், மக்கள் தேவைக்கு ஏற்றவாறு 5 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும். அதிகபட்சமாக 2.5 நிமிடத்துக்கு ஒரு ரயிலை இயக்க முடியும். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் சுமார் 30 நொடிகள் வரை ரயில் நின்று செல்லும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போக்குவரத்து நெரிசல் குறையும்
இது தொடர்பாக போக்குவரத்துத் துறையின் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வரும் நேரத்தில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் போன்ற திட்டங்கள் தமிழகத்தின் கனவுத் திட்டங்களாக உள்ளன. ஒட்டுமொத்த மெட்ரோ ரயில் பணிகள் முடிந்தால்தான் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும். தற்போது, ஆலந்தூர் - கோயம்பேடு வரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதால், அந்த பாதையில் 10 முதல் 15 சதவீதம் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது’’ என்றனர்.