

கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த சென்னையில் நேற்று வெப்பம் சற்று தணிந்திருந்தது. அடுத்த 2 நாட்களுக்கு மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று முன் தினம் இரவு பரவலாக பல இடங்களில் மழை பெய்தது. பல்லாவரம், குரோம்பேட்டை, பழவந்தாங்கல், மீனம்பாக்கம், கிண்டி ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்திருந்தது. அது தவிர கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர் என பல பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல் லேசான மழை பதிவாகியிருந்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 10 மி.மீ, மீனம்பாக்கத்தில் 25 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் பல இடங்களிலும் கேரளத்திலும் தீவிரமடைந்து வருகிறது. இன்னும் 5 நாட்களில் கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.