

குறுவை சாகுபடி இல்லாததால் ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததை காரணம் காட்டி நடப்பாண்டும் குறுவை பாசனத்திற்காக ஜூன் 12 ஆம் தேதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனால் காவிரி பாசன விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால் ஏற்படும் பாதிப்புகளை ஈடுகட்ட, காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயத்திற்காக ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்; விவசாயத்திற்கு தேவையான கருவிகள் வாடகையின்றி வழங்கப்படும்; நுண்ணூட்டச் சத்து மானியம், இலவச ஜிப்சம் ஆகியவை வழங்கப்படும்; இத்தொகுப்புத் திட்டத்திற்காக ரூ.40.97 கோடி செலவிடப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதில் புதிதாக எதுவுமில்லை.
கடந்த 3 ஆண்டுகளாக அறிவித்த தொகுப்புத் திட்டத்தை புதிய திட்டம் போல அறிவித்திருக்கிறார்.
கடந்த 3 ஆண்டுகளாக இத்திட்டத்தால் எப்படி பயன் ஏற்படவில்லையோ, அதேபோல் இந்த ஆண்டும் பயன் கிடைக்காது. மாறாக உழவுக் கருவிகளை வாடகைக்கு எடுத்ததாகவும், நுண்ணூட்டச் சத்து மானியம், ஜிப்சம் ஆகியவற்றை உழவர்களுக்கு வழங்கியதாகவும் கணக்குக் காட்டி அ.தி.மு.க.வினரும், அவர்களுக்கு துணைபோகும் அதிகாரிகளும் பணம் பார்ப்பதற்கு மட்டுமே இந்த திட்டம் உதவும்.
மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டுமானால் அணையில் குறைந்தது 90 அடி தண்ணீர் இருக்க வேண்டும். ஆனால், இன்றைய நிலவரப்படி அணையில் 72. 68 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததாலும், தென் மேற்கு பருவமழை பெய்யும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பதாலும் குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் கிடைப்பது ஐயம் தான்.
காவிரி பாசன மாவட்டங்களில் நீரேற்றிகளின் உதவியுடன் குறுவை பாசனம் செய்வது முழுமையாக சாத்தியமற்றதாகும். கடந்த 3 ஆண்டுகளாகவே மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவதில்லை என்பதால் வழக்கமான அளவில் குறுவை சாகுபடி செய்யப்பட வில்லை.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படுவது வழக்கம். ஆனால், மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்படாததால் கடந்த 3 ஆண்டுகளாகவே சராசரியாக 60,000 முதல் 75,000 ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த ஆண்டும் அதே அளவில் தான் குறுவை சாகுபடி சாத்தியமாகும். இதனால் ஏக்கருக்கு குறைந்தது 3 டன் வீதம் மொத்தம் 7 லட்சம் டன் குறுவை நெல் உற்பத்தி இழப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி, 3.25 கோடி மனித வேலை நாட்கள் இழப்பு ஏற்படும்.
இதற்கு தமிழக அரசு தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கை கர்நாடகத்திடமிருந்து உரிய காலத்தில் பெற வேண்டியது அரசின் கடமை ஆகும். கோடைக்காலத்தின் தொடக்கத்தில் கர்நாடக அணைகளில் அதிக தண்ணீர் இருந்தது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் 57 விழுக்காடும், கபினி அணையில் 66 விழுக்காடும், ஹேமாவதியில் 16 விழுக்காடும், ஹாரங்கியில் 8 விழுக்காடும் தண்ணீர் இருந்தது. இதில் கிருஷ்ணராஜசாகர் அணை நீரில் 42 விழுக்காட்டையும், கபினி நீரில் 26 விழுக்காட்டையும் கோடை சாகுபடிக்காக கர்நாடகம் பயன்படுத்திக் கொண்டது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகம் கோடை சாகுபடி செய்யக்கூடாது. அதன்படி கர்நாடகம் கோடை சாகுபடி செய்வதை தடுத்திருந்தால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு போதிய அளவில் தண்ணீர் பெற்றிருக்க முடியும். அவ்வாறு செய்ய தமிழக அரசு தவறியதால் தான் தொடர்ந்து நான்காவது ஆண்டாக நடப்பாண்டும் குறுவை சாகுபடி செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து 3 ஆண்டுகளாக நிலவி வரும் வறட்சியால் மீள முடியாத கடன் சுமைக்கு ஆளாகியுள்ள விவசாயிகளால் இந்த ஆண்டும் குறுவை சாகுபடி இல்லாததால் ஏற்படும் பாதிப்பை தாங்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டு உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்; உழவர்களின் பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அதேபோல், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் உழவுத் தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.15,000 வழங்க வேண்டும்; அத்துடன் ஊரக வேலை உறுதித் திட்டப்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் 150 நாட்கள் வேலை வழங்க வேண்டும்" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.