

மாநகராட்சி பல் மருத்துவர்களின் பணிநீக்க உத்தரவை ரத்துசெய்து, அவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த பல் மருத்துவர்களை திடீரென பணிநீக்கம் செய்திருப்பது மருத்துவர்களின் உரிமைகளுக்கு எதிரானது. இவர்கள் திமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. ஓர் ஆட்சிக் காலத்தில் பணியில் சேர்ந்தவர்களை மற்றொரு ஆட்சிக் காலத்தில் பணிநீக்கம் செய்வது தொழிலாளர் விரோதப் போக்காகும். எனவே, பல் மருத்துவர்களின் பணிநீக்க உத்தரவை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக ரத்து செய்து அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.