Published : 08 Jun 2015 10:29 AM
Last Updated : 08 Jun 2015 10:29 AM

வருமானத்தில் ஒரு பகுதியை ஊர்நலனுக்கு செலவிட்டு உலகுக்கு வழிகாட்டுகிறது புதுமடம் கடற்கரை கிராமம்

ஊர்நலனே முக்கியம் என்பதையும் அதற்கான பொறுப்புகளையும் நாம் உணர்ந்தால் நமது தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்பதற்கு வழி காட்டுகிறது புதுமடம் கடற்கரை கிராமம்.

ராமநாதபுரம் - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப் புளி அருகே இருக்கிறது புதுமடம் கடற்கரை கிராமம். பெயருக்குத் தான் கிராமமே தவிர தன்னிறை வில் நகரங்களை சவாலுக்கு அழைக்கிறது. இந்த கிராமத் தைச் சேர்ந்தவர்கள் வெளிநாடு களிலும் சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் தொழில் செய்து பொருளீட்டுவதால் வளம் செழிக் கிறது.

இந்த கிராமத்தைச் சேர்ந்த செல்வந்தர்கள் தங்களது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை கிராம பொதுநலனுக்காக செலவிடு வதும் புதுமடத்தின் முன்னேற்றத் துக்கு முக்கியக் காரணம்.

அதுகுறித்துப் பேசுகிறார் புதுமடத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜாபர் அலி. “எங்கள் ஊரில் 75 சதவீதம் முஸ்லிம்கள் இருந்தாலும் இங்கு எந்தவிதமான சாதி, மத வேற்றுமைக்கும் இடம் தரமாட்டோம். ஆண்டுதோறும் ரம்ஜான் பெருநாள் முடிந்ததும் ஊர்க்கூட்டம் போடுவோம். அப் போது, ஊருக்குச் செய்ய வேண் டிய நல்ல காரியங்கள் குறித்து விவாதிப்போம். அதில் எடுக்கப் படும் முடிவுகளை வைத்து பணி களை தொடங்கிவிடுவோம்.

ஊராட்சியிலிருந்து சரிவர குப்பை அள்ளப்படுவதில்லை என்பது குறையாக இருந்தது. அதை போக்குவதற்காக ‘பைத்துல் மால்’ (ஏழைகளுக்கு சேவை செய்தல்) என்ற அமைப்பை உருவாக்கினோம். அந்த அமைப் புக்காக 10 பேர் சேர்ந்து டிராக்டர் வாங்கிக் கொடுத்தார்கள்.

துப்புரவு பணியாளர்கள் இரண்டு பேரை தலா ரூ.5 ஆயிரம் சம்பளத்துக்கு நாங்களே நியமித்தோம். ரூ.8 ஆயிரம் சம்பளத்தில் டிராக்டருக்கு டிரைவர் போட்டு ’பைத்துல்மால்’ அமைப்பே குப்பைகளை அள்ள ஆரம்பித்தது. இதற்காகும் மாதாந்திரச் செலவு முப்பதாயிரத்தை வெளிநாடுகளில் உள்ள எங்கள் ஊர் செல்வந்தர்கள் சிலர் ஏற்றுக்கொள்கிறார்கள்.

புதுமடத்தைச் சேர்ந்த யாருக் காவது விபத்து ஏற்பட்டாலோ, அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டாலோ அதுகுறித்த விவரத்தை எங்கள் ஊர் இளைஞர் கள் உடனடியாக முகநூலில் போட்டுவிடுவார்கள். அடுத்த ரெண் டொரு நாட்களுக்குள் சிகிச்சைக் குத் தேவையான பணம் எங்கள் ஊர்க்காரர்களிடமிருந்து வந்து விடும். இந்த வழியில் இரண்டு மாதங்களுக்கு ஒரு மருத்துவ உதவிக்காவது நிதி திரட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

எங்கள் ஊர் உயர்நிலைப் பள்ளிக்கு கடந்த ஆண்டு பொன்விழா. இப்போது அது மேல்நிலைப் பள்ளியாக இருக்கிறது. பொன் விழாவையொட்டி, அங்கு படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து ரூ.25 லட்சத்தில் கலையரங் கம் கட்டிக் கொடுத்தார்கள். பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் பிள்ளைகளுக்கு பொது நிதியிலி ருந்து ரொக்கப் பரிசும் கொடுக்கிறோம்.

பெண்களுக்கென தனியாக உயர்நிலைப்பள்ளி தேவைப்படு கிறது. அதற்காக, இலங்கையில் தொழில்செய்யும் முகமது உனேஸ் என்பவர் தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை இலவசமாக விட்டுக் கொடுத்தார். புதிய பள்ளிக்காக ஊர் தரப்பில் செலுத்த வேண்டிய பங்களிப்பையும் செலுத்திவிட்டுக் காத்திருக்கிறோம்.

ஏழைப் பெண்களின் திருமணத் துக்கும் எங்களால் முடிந்த உதவி களை செய்கிறோம். அந்தப் பெண் களை யாரும் தாழ்மையாக பேசிவிடக் கூடாது என்பதற்காக யாருக்கு இந்த உதவியை செய்கிறோம் என்பதை நாங்கள் வெளிப்படுத்துவதில்லை.

வரும் ஆண்டிலிருந்து, அவசர உதவிக்கு பணம் தேவைப்படுபவர்களுக்கு வட்டியில்லா கடன் கொடுக்கவும் தீர்மானித்திருக்கிறோம். இதற்காக பொதுநிதி ஒன்றை திரட்டி அதை நிர்வகிக்கும் பொறுப்பையும் ’பைத்துல்மால்’ அமைப்பிடம் கொடுக்க இருக்கிறோம்’’என்று சொன்னார் ஜாபர் அலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x