

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியதுடன், வழக்கை சமரச மையத்துக்கு பரிந்துரை செய்த சென்னை ஊயர் நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ், மற்றொரு வழக்கில் பலாத்காரர்களிடம் கருணையே காட்டக்கூடாது என்று கூறியுள்ளார்.
நான்கரை வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு ஒன்றில் குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டதை உறுதி செய்த நீதிபதி பி.தேவதாஸ், பலாத்காரர்களை கடுமையாக கண்டித்துள்ளார்.
"நான்கரை வயது சிறுமியை இவர் பலாத்காரம் செய்துள்ளார். இப்போது, ஆண்களின் நெறிதவறிய ஆசைக்கு பெண்களும், குழந்தைகளும் இலக்காவது அதிகமாகியுள்ளது. இது காரணகாரியமற்ற குற்றம், இது மிருக நடத்தை. இப்படிப்பட்ட குற்ற நடத்தைகளுக்கு கருணை காட்டக் கூடாது. இத்தகைய கழுகுகளை எளிதாக விட்டுவிடலாகாது.
நான்கரை வயது குழந்தை தனக்கு நேர்ந்ததை முதிர்ச்சியடைந்த ஒரு பெண் போல் விவரிக்க இயலாது. எனவே இந்த வழக்கில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான மருத்துவ ஆதாரங்கள் வலுவாக உள்ளன." என்று கூறி டிசம்பர் 20, 2010-ம் ஆண்டு ஈரோடு முதன்மை உதவி அமர்வு நீதிபதி வழங்கிய 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையை உறுதி செய்தார் பி.தேவதாஸ்.
ஈரோடு மாவட்டம் ஒரிசேரிப்புதூரைச் சேர்ந்த சிறுமியை செந்தில் குமார் என்ற நபர், சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்டதையடுத்து, இனிப்புகளுடன் ஆசை காட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த 10 ஆண்டுகால கடுங்காவலை எதிர்த்தே தற்போது குற்றவாளி செந்தில்குமார் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ் கடுங்காவல் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.