Published : 21 Jun 2015 08:59 AM
Last Updated : 21 Jun 2015 08:59 AM

டார்னியர் விமானத்தை தேடும் பணியில் ரிலையன்ஸ் நிறுவன அதிநவீன கப்பல்: தொலையுணர்வு கேமரா அனுப்பிய புகைப்படங்கள் ஆய்வு

காணாமல் போன இந்திய கடலோர காவல் படை விமானத்தை தேடும் பணியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘ஒலிம்பிக் கெனைன்’ என்ற அதிநவீன ஆய்வுக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அந்தப் கப்பலில் உள்ள தொலையுணர்வு கேமரா அனுப்பியுள்ள படங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான டார்னியர் சிஜி-791 என்ற சிறிய ரக விமானம், கடந்த 8-ம் தேதி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போனது. கடந்த 12 நாட்களாக தேடியும் விமானத்தைப் பற்றியோ, அதில் இருந்த 3 பேர் பற்றியோ எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்திய கடற்படை கப்பலான ‘சந்த்யாக்’, தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சி கப்பலான ‘சாகர் நிதி’, இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ‘சிந்துத்வாஜ்’ ஆகி யவை விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால், உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

கடந்த 17-ம் தேதி சென்னை யில் நிருபர்களைச் சந்தித்த இந்திய கடலோர காவல்படை (கிழக்கு மண்டலம்) ஐஜி எஸ்.பி.ஷர்மா, ‘‘சிக்னல் விட்டுவிட்டு கிடைப்பதால், விமானத்தை தேடும் பணி தாமதமாகி வருகிறது. இந்திய கடற்படையில் உள்ள கப்பல்களில் 700 மீட்டர் ஆழம் வரை மட்டுமே ஆய்வு செய்யும் வகையிலான கருவிகள் உள்ளன. அதனால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘ஒலிம்பிக் கெனைன்’ என்ற அதிநவீன ஆராய்ச்சிக் கப்பலை வரவழைக்க உள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

அதன்படி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒலிம்பிக் கெனைன் கப்பல், வரவழைக்கப்பட்டு விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய கடலோர காவல்படை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த 10 நாட்களாக விமானத்தை தேடும் பணி நடந்து வந்தாலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. 19-ம் தேதி முதல் விமானத்தை தேடும் பணியில் ரிலையன்ஸ் கப்பல் ஈடுபட்டு வருகிறது. இந்தக் கப்பலில் எதிரொலி மூலம் எதிரே உள்ள பொருட்களை கண்டு பிடிக்கும் கருவி, அதிக ஒளியை உமிழும் விளக்குடன் கூடிய நீருக்கடியில் செயல்படத்தக்க தொலையுணர்வு (ரிமோட் சென்சிங்) கேமரா ஆகியவை உள்ளன. இந்தக் கேமரா உதவியுடன் கடலுக்கடியில் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளையில் இந்திய கட லோர காவல்படை கப்பல்களும் வெவ்வேறு பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தை தேடும் பணி தொடர்பாக இந்திய கடலோர காவல் படை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ரிலையன்ஸ் கப்பலில் உள்ள அதிநவீன கேமரா அனுப்பியுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விமான மீட்புக் குழு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. அதன் விவரங்கள் அடங்கிய அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும்’’ என்றார்.

இந்தக் கப்பலில் எதிரொலி மூலம் எதிரே உள்ள பொருட்களை கண்டுபிடிக்கும் கருவி, அதிக ஒளியை உமிழும் விளக்குடன் கூடிய நீருக்கடியில் செயல்படத்தக்க தொலையுணர்வு கேமரா ஆகியவை உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x